ஆளுங்கட்சி கொடி கட்டிய காரில் குட்கா கடத்தல்- வடமாநிலத்தவர் கைது

ஆளுங்கட்சி கொடி கட்டிய காரில் குட்கா கடத்தல்- வடமாநிலத்தவர் கைது

கைது செய்யப்பட்ட வஸ்னாராம்,சிம்பாராம்

திமுக கொடி கட்டிய சொகுசு காரில் குட்கா கடத்திய இரு வடமாநிலத்தவரை போலீசார் கைது செய்தனர். ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளும் கட்சி கொடியை பயன்படுத்தி கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

தஞ்சை அருகே திருவையாறு பகுதிக்கு ஹான்ஸ், பான்மாசலா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு வருவதாக நடுக்காவேரி காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று கண்டியூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில் காவல்துறையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது, மணத்திடல் பகுதியில் தி.மு.க., கொடி கட்டிய டொயோட்டா சொகுசுக் கார் அங்கு வந்தது. அதனை சோதனை செய்வதற்காக காவல்துறையினர் நிறுத்தினர். காரில் இருந்த இருவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். இதில் சந்தேகமடைந்தது காரை சோதனை செய்தனர். அப்போது கார் சீட்டின் அடியில் 700 கிலோ எடை கொண்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்தது. இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் ராஜஸ்தான் மாநிலம் ஜின்பூர் தாலுகாவை சேர்ந்த வஸ்னாராம்(28), சிம்பாராம்(30), என்பது தெரியவந்தது. இருவரையும் காவல்துறையினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். இவர்கள் எந்த மாநிலத்திற்கு போதைப் பொருட்கள் எடுத்துச் சென்றாலும், அந்த மாநிலத்தில் ஆளும் கட்சியின் கொடியை பயன்படுத்தி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இருப்பினும் அவர்கள் வந்த கார் திருவாரூர் மாவட்ட பதிவு எண் என்பதால் அது போலியானதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags

Next Story