இந்திய உலகக்கோப்பை அணியில் இடம்பெற நடராஜன் தகுதியானவர் - முத்தையா முரளிதரன்.

உலகக்கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற நடராஜன் தகுதியானவர் தான்.அதிக விக்கெட்டுகள் எடுக்கும் போது மட்டுமே நடராஜனை பற்றி பேசுபவர்கள் மற்ற நேரத்தில் அமைதியாகி விடுகிறார்கள் என ஹைதராபாத் அணி பந்து வீச்சு பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

ஐபி எல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை - ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. போட்டிக்காக இரு அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியது, பேட்டர்ஸ் இந்த தொடரில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அடுத்த ஆண்டு பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது. அதிக ரன்கள் அடிப்பதற்கு இம்பாக்ட் பிளேயர் விதியும் ஒரு காரணம். உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்படுவரா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், அதிக விக்கெட்டுகளை அவர் எடுக்கும்பொழுது மட்டும் அவரை பற்றி பேசுகிறீர்கள். நடராஜன் நன்றாக விளையாடும் பொழுது நினைவில் வைத்துக்கொள்வர். அதன் பின்னர் அமைதியாகி விடுவர்.

கடந்த 5 ஆண்டுகளாக நடராஜன் சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஆனால் அவர் கவனிக்கப்படவில்லை. நான் வேறு நாட்டை சேர்ந்தவன் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இடம் பெறுவாரா என்பது குறித்து நான் கருத்து கூற முடியாது அது இந்திய அணியின் தேர்வர்கள் கையில் உள்ளது. ஆனால் என்னைப் பொருத்தவரை உலகக்கோப்பக்கான இந்திய அணியில் விளையாட நடராஜன் தகுதியானவர் என்று கருதுகிறேன், என கூறினார். கடந்த ஐபிஎல் தொடரில் நடராஜனுக்கு காயம் ஏற்பட்டதால் சரியாக விளையாட முடியவில்லை. இந்த சீசனில் நடராஜன் நன்றாக விளையாடி வருவதாக கூறினார்.

பந்து வீச்சாளர்கள் விட பேட்டிங் செய்பவர்களுக்கு இம்பேக்ட் விதி மிக உதவியாக உள்ளது. வீரர்கள் அழுத்தம் இன்றி விளையாட அது உதவுகிறது.இதற்க்கு முன்பு 170,180 சிறந்த இலக்காக இருந்த நிலையில் தற்போது 230,240 ரன்கள் சிறந்த இலக்காக உள்ளது. ஒரு வேளை இது அடுத்த வருடம் மாறலாம், பேட்ஸ்மேன்களுக்கு களம் சவாலாக அமைந்தது பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலை வரலாம். உம்ரான் மாலிக் சிறப்பாக தான் பந்து வீசி வருகிறார், தற்போது சிறந்த பந்து வீச்சாளர்கள் வைத்துள்ளோம். அவர் அவருடைய திறமையை தொடர்ந்து வெளிக்காட்டி வருகிறார்.என்றார்.

சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி செய்தியாளர்களிடம் பேசிய போது, போட்டியின் நிலையை அறிந்து ஜடேஜா விளையாடுகிறார். பயிற்சியின் போதும் சிறப்பாக தான் விளையாடி வருகிறார். அவர் சிறந்த பார்மில் தான் உள்ளார். ஆட்டத்தின் வெவ்வேறு விதமான சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு ஜடேஜா தன்னை செதுக்கி கொண்டு சிறப்பாக விளையாடுகிறார். கடந்த சில போட்டிகளில் சென்னையில் பனி பொழிவு பந்து வீச்சாளர்களுக்கு மிகுந்த சவாலாக இருந்து வருகிறது. இருந்தாலும் சென்னையின் களம் எங்களுக்கு நன்றாக தெரியும் அதனால் சிறப்பாகவே பந்து வீச முயற்சி செய்து வருகிறோம் என்ற அவர், ஷிவம் துபே மிகச்சிறப்பாக விளையாடி வருவதாக கூறினார்.

Tags

Next Story