குமரி மாவட்ட கோவில்களில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகை நயன்தாரா-விக்னேஷ்சிவன் தம்பதியினர் நேற்று குமரி மாவட்டம் வந்தனர். சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த நயன்தாரா தம்பதியினரை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் வரவேற்றார். இதைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா தம்பதியினர் கோவிலில் சென்று தரிசனம் செய்தனர். அங்குள்ள ஆஞ்ச நேயரையும் வழிபட்டனர்.
பின்னர் நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு வந்தனர். நாகராஜா கோவிலில் பயபக்தியுடன் நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதிக்கு சென்ற நடிகை நயன்தாரா நெற்றியில் திருநாமம் இட்டு அய்யா வைகுண்டரை வழிபட்டார். விக்னேஷ்சிவன் தலையில் தலைப்பாகையுடன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து இருவரும் பதியில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தனர்.
பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உள்ள ஸ்ரீ காலபைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, பாலசவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள பகவதி அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி, தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதி, ஸ்ரீநாகராஜா, சூரிய பகவான் சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.