காதல் திருமணத்தை பதிவு செய்ய முடியாத வேதனையில் புதுமாப்பிள்ளை தற்கொலை

காதல் திருமணத்தை பதிவு செய்ய முடியாத வேதனையில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்டார்.

தேவூர் அருகே புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார். காதல் திருமணத்தை பதிவு செய்ய முடியாத வேதனையில் விபரீத முடிவை தேடிக்கொண்டார். சேலம் மாவட்டம் தேவூர் அருகே நல்லங்கியூர் பகுதியை சேர்ந்த கணேசன்- இந்திராணி தம்பதியின் 3-வது மகன் இளவரசன் (வயது 21).

சலூன்கடை தொழிலாளி. இவர், தன்னுடைய உறவுக்கார பெண் திவ்யாவை காதலித்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இளவரசன், திவ்யாவை திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பாக கருப்பூர் போலீஸ் நிலையத்தில் திவ்யாவின் தந்தை ரத்தினம் புகார் அளித்தார். போலீசார் காதல் தம்பதியை அழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது சமரசம் பேசிய போலீசார், திருமணத்தை பதிவு செய்து அதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு இளவரசன் சம்மதம் தெரிவித்து விட்டு காதல் மனைவியுடன் வீட்டுக்கு வந்துள்ளார். திருமணம் பதிவு தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தை இளவரசன் தொடர்பு கொண்ட போது பெண்ணுக்கு 21 வயது இருந்தால் தான் திருமணத்தை பதிவு செய்ய முடியும் என்று அவர்கள் கூறியதாக தெரிகிறது. . இதற்கிடையே திவ்யாவின் பெற்றோர் தரப்பில் இருந்து திருமண பதிவு சான்றிதழை கேட்டு வற்புறுத்தி வந்துள்ளதாக தெரிகிறது. திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற இளவரசனின் முயற்சி நிறைவேறவில்லை.

காதல் திருமணத்தை நம்மால் பதிவு செய்ய முடியவில்லையே என்றும், போலீசாரிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லையே என்றும் இளவரசன் வேதனை அடைந்துள்ளார். செய்வதறியாது திகைத்த அவர், உயிரை மாய்த்துக் கொள்வதுதான் ஒரே வழி என்ற விபரீத முடிவை எடுத்துள்ளார். அதன்படி விவசாயத்துக்கு பயன்படுத்தும் களைகொல்லி மருந்தை குடித்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் தான் விஷம் குடித்து விட்டதாக கூறி கதறியுள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு இளவரசனை கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மதியம் இளவரசன் பரிதாபமாக இறந்தார். காதல் கணவரது உடலை பார்த்து திவ்யா கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. இளவரசன் சாவு குறித்து தந்தை கணேசன் தேவூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இ்ன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

Tags

Next Story