புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மரணம் - கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல் !!
செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மரணம்
கள்ளக்குறிச்சியை சேர்ந்த சௌந்தர்யா செய்தி துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் பல்வேறு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். பாலிமர், சத்யம், மற்றும் நியூஸ் தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளில் பணிபுரிந்த அவர், செய்தி வாசிக்கும்போது தனது உச்சரிப்பால் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சவுந்தர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பலரும் இவருடைய சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கினர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இவருடைய சிகிச்சைக்காக 5 லட்சம் கொடுத்து உதவினார்.
கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்று வந்த சௌந்தர்யாவிற்கு இரத்த புற்றுநோய் பாதிப்பு முற்றிய நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தொலைக்காட்சி ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது உடல் பத்திரிகையாளர்களின் அஞ்சலிக்காக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மறைவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். கவர்னர் மாளிகையின் எக்ஸ் பதிவில், "செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அவர்களின் மரணத்தை அறிந்து வேதனையடைந்தேன்; அவர் ஒரு பிரகாசமான மற்றும் சிறந்த செய்தித் தொகுப்பாளராக விளங்கினார்; அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அனுதாபங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இறுதி சடங்கு சொந்த ஊரான கள்ளக்குறிச்சியில் நாளை நடைபெறவுள்ளது.