நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள்

நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஊட்டி, குன்னூர், கூடலூர், பவானிசாகர், அவிநாசி, மேட்டுப்பாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளடங்கிய நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த மாதம் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் 2,60,249, ஊட்டி தொகுதியில் 1,95,631, கூடலூர் தொகுதியில் 1,92,282, குன்னூர் தொகுதியில் 1,88,929, மேட்டுபாளையம் சட்டமன்ற தொகுதியில் 3,05,406, அவிநாசி தொகுதியில் 2,85,755 என நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் 14,28,252 வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி உள்ளவர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர். இறுதி வேட்பாளர் பட்டியலின் படி நீலகிரி தொகுதியில் 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் இரு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள், தலா ஒரு கட்டுபாட்டு கருவிகள், வி.வி.பேட்., என மொத்தம் 1619 இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. நீலகிரி தொகுதியில் 70.93 சதவீத வாக்குகள் பதிவானது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. பின்னர் இயந்திரங்கள் வாக்கு எண்ணும் ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டது. மேலும் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் முகவர்கள் தங்குவதற்கு வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதேபோல் துணை ராணுவம் உள்பட மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு, 180 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் நாளை வாக்கு எண்ணும் பணிகள் (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. அன்றைய தினம் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது. நீலகிரி தொகுதியில் வாக்கு எண்ணும் பணியையொட்டி வாக்கும் எண்ணும் மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணும் பணிக்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அடையாள அட்டை, வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான பொருட்கள் வினியோகம் செய்யும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:- நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.

ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டு இருக்கும். இதேபோல் அஞ்சல் வாக்குகளை எண்ணுவதற்காக கூடுதலாக 7 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், அவினாசி சட்டமன்ற தொகுதிகளில் 23 சுற்றுகளாகவும், பவானிசாகர் 22, ஊட்டி 18, குன்னூர் 17, கூடலூர் 16 சுற்றுகளாகவும் நடக்கிறது. வாக்கு எண்ணும் பணியில் 350 அலுவலர்களும், 120 நுண் பார்வையாளர்களும் ஈடுபட உள்ளனர். நீலகிரி தொகுதிக்கு வாக்கு எண்ணும் பணிக்காக உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி அந்தஸ்தில் கூடுதலாக 2 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story