நீலகிரி : சுற்றுலா பயணிகளுக்கு 7 லட்சம் இ-பாஸ்
சோதனை சாவடியில் காத்திருக்கும் வாகனங்கள்
சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரிக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஏப்ரல், மே மாதங்களில் சுமார் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த இரு மாதங்களில் நீலகிரி மாவட்டத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின் பேரில், தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு இ-பாஸ் முறையை அமல் படுத்தியது.
நீலகிரி மாவட்டத்தை தவிர வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஆன்லைன் மூலம் இ-பாஸ் விண்ணப்பித்து, பெற்று வந்தால் மட்டுமே நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக மாவட்டத்திலுள்ள 16 சோதனை சாவடிகளிலும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டும் உள்ளே அனுமதிக்கின்றனர். மேலும் நீலகிரி பதிவு எண் கொண்ட டி.என்-43 வாகனங்கள் மற்றும் அரசு பஸ்களுக்கு தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அப்படி இருந்தும் வாகனங்கள் அதிக அளவில் வருவதால், மூன்று சுற்றுகளாக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இ-பாஸ் முறையில் விண்ணப்பித்த வாகனங்களை மட்டும் பணியாளர்கள் மாவட்டத்திற்குள் அனுப்புகின்றனர். நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை நேற்று வரை 1,35,816 வாகனங்களுக்கும், 6,96,391 நபர்களுக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 29,127 வாகனங்களுக்கும், 1,43,910 நபர்களுக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டது. ஆனால் நேற்று 4370 வாகனங்களும், 22,507 நபர்களும் மட்டுமே நீலகிரிக்குள் வந்துள்ளனர். வார நாட்களை விட வார இறுதி நாட்களில் இ -பாஸ்க்காக விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை இரு மடங்காக உள்ளது. இது தவிர அரசு பஸ்களில் வருபவர்களை அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் தனியாக கணக்கில் கொண்டு வரப்படுகிறது.