நீலகிரியில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை; வியாபாரிகள் ஏமாற்றம்!

மலர்கண்காட்சி தினத்தன்று முதல்முறையாக நீலகிரி வெறிச்சோடியதால் உள்ளூர் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக மலர் கண்காட்சி மே 18 அல்லது 19-ம் தேதி தொடங்கும். இந்த ஆண்டு முன்னதாக 10-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. வழக்கமாக மலர் கண்காட்சி நடக்கும் நாட்களில் நீலகிரி மாவட்டம் முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். ஊட்டியில் சுற்றுலா பயணிகள் முண்டியடித்துக் கொண்டு செல்வார்கள். உணவகம் தங்குமிடம் அனைத்தும் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே முன் பதிவு செய்யப்பட்டுவிடும். உணவகங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாப்பிடும் நிலை ஏற்படும்.

சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரு சுற்றுலா தளத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல 2 மணி நேரம் வரை ஆகும். இந்நிலையில் இந்தாண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின் பேரில் இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை பெருமளவு குறைந்தது. சாலைகள் சில இடங்களில் வெறிச்சோடி காணப்பட்டன. தங்கும் விடுதிகள், உணவகங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படவில்லை.

இதனால் வணிகம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் பெரிய தொழில் வாய்ப்புகள் கிடையாது. சுற்றுலா வருமானத்தை நம்பி தான் 60 சதவீத மக்கள் உள்ளனர். சுற்றுலா வருமானம் என்றால் ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்களில் தான் முழுமையாக சம்பாதிக்க முடியும். ஆனால் இந்த ஆண்டு இ-பாஸ் நடைமுறையில் இருப்பதால் சுற்றுலா பயணிகளின் ஊட்டி வருகை குறைந்துவிட்டது. இதுமட்டுமின்றி ஒரே நாளில் தாவரவியல் பூங்காவில் மலர்கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, ஊட்டி அரசு கல்லூரி மைதானத்தில் நாய் கண்காட்சி நடைபெற்றதாலும் பல இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் பிரிந்து சென்று விட்டதால் கூட்டம் குறைந்துவிட்டது.

மேலும் தாவரவியல் பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.150 கட்டணம் நிர்ணயம் செய்ததால், பெரும்பாலானவர்கள் தாவரவியல் பூங்காவின் வாசல் வரை வந்துவிட்டு திரும்பி சென்று விட்டனர். ரோஜா பூங்காவிலும் பெரியவர்களுக்கு ரூ. 75 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே இ-பாஸ் நடைமுறையை நிறுத்தி, தாவரவியல் பூங்காவில் கட்டணத்தை குறைக்க வேண்டும்.‌ இல்லாவிட்டால் தொழில்கள் பாதிக்கப்பட்டு வருமான இழப்பு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story