ஜெல்லி மீன்களால் ஆபத்து இல்லை - மீன்வளத்துறை ஆய்வாளர்

ஜெல்லி மீன்களால் ஆபத்து இல்லை - மீன்வளத்துறை ஆய்வாளர்

ஜெல்லி மீன் 

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் காணப்படும் ஜெல்லி மீன்களால் பக்தர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இல்லை என மீன்வளத்துறை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குகின்றன. கடலில் நீராடும் பக்தர்களை கடிப்பதாலோ அல்லது தொடுவதாலோ அலர்ஜி ஏற்பட்டு ஊறல் ஏற்படுகிறது. சில பக்தர்களுக்கு பலத்த காயம் ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் மற்றும் இணை ஆணையர் கார்த்திக் ஆகியோரிடம் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் சிவராஜா மற்றும் பணியாளர்கள் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவுப்படி திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தூத்துக்குடி மாவட்ட உதவி இயக்குனர் புஷ்ரா ஷபனம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சிவராமகிருஷ்ணன் ஆகியோர் கோவில் கடற்கரையில் ஆய்வு செய்தனர்.

பின்னர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் கூறியதாவது: பொதுவாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த வகையான செஞ்சொறி மீன்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் கடல் நீரின் திசை மாறுபாட்டிற்கு ஏற்ப காணப்படுகிறது. இது கொட்டும் தன்மையுடைய ஜெல்லி மீன்களாகும். ஆகையால் நீரில் இருக்கும் போதோ அல்லது கடற்கரை பகுதிகளில் கிடந்தாலோ அவற்றை கையினால் தொடக் கூடாது. அவற்றை அறியாமல் தொடுவதால் ஏற்படும் எரிச்சல் மற்றும் தீக்காயம் போல் ஏற்பட்ட காந்தலை குறைக்க வினிகரை, காயம் ஏற்பட்ட பகுதியில் சுமார் ஒரு நிமிடங்களில் தெளித்து பயன்படுத்தலாம். பின்னர் கலமைன் அல்லது கலட்ரைல் மருந்தினை உடனடியாக பயன்படுத்தி 24 மணி நேரத்திற்குள் ஏற்பட்ட காயம் சரியாகிவிடும். இந்த வகை மீன்களால் பக்தர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story