நாற்று நடவு பணிகளில் வடமாநில தொழிலாளர்கள்

நாற்று நடவு பணிகளில்  வடமாநில தொழிலாளர்கள்
ஜெயங்கொண்டம் அருகே வாழைக்குறிச்சி கிராமத்தில் வடமாநில தொழிலாளர்கள் நாற்று நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் அருகே நாற்று நடவு பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களை பணிக்கு அமர்த்துவதால் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் மிச்சமாவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்

ஜெயங்கொண்டம் அருகே ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வரை மிச்சப்படுவதால், நாற்று நடவு பணிகளுக்கு வட மாநில தொழிலாளர்களை வைத்து மும்முறமாக குறுவை சாகுபடி பணிகளை தா.பழூர் டெல்டா விவசாயிகள் முடுக்கி விட்டுள்ளனர்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை அழைக்கப்பட்டாலும், காவிரி நீர் பாயும் அரியலூர் மாவட்டமும் டெல்டாவாக விளங்கி வருகிறது. இதில் தா.பழூர் மற்றும் திருமானூர் ஆகிய பகுதிகள் பெண்ணாற்று பாசனம் மற்றும் புள்ளம்பாடி வாய்க்காலில் இருந்து பாசன வசதி பெறும் காவிரி டெல்டாவாக விளங்கி வருகின்றன. இப்பகுதியில் பிரதான தொழிலே விவசாயமாக இருந்து வரும் நிலையில், தா.பழூர் டெல்டா பகுதியில் கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நடவு பணிகளில் தற்போது விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

ஒரு காலத்தில் விவசாய பணிகளில் ஈடுபடுவதற்கு நமது விவசாய தொழிலாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு கூட்டாஞ்சோறுடன் செல்வார்கள். விவசாய பணிகளுக்கு செல்வது தங்களுக்கு பெருமை என்று நம்பி இருந்த காலம் அது. தமிழர்களின் அடையாளமாக கருதி முழு அர்ப்பணிப்போடு தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, தங்கள் வாழ்வாதாரத்தையும் பெருக்கிக் கொண்டு, விவசாயத்தை பாதுகாத்து வந்தனர். ஆனால் இன்றைய விவசாயத்தின் நிலை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. விஞ்ஞான வளர்ச்சியாலும், காலத்தின் கட்டாயத்தாலும் தற்போது பல்வேறு சிக்கல்கள் உருவெடுத்து வருகின்றன. குறிப்பாக எடுத்துக் கொண்டால் தண்ணீர் பற்றாக்குறை, போதிய மழை இல்லாதது, தொழிலாளர்கள் பற்றாக்குறை, பூச்சி நோய் தாக்குதல், பருவநிலை மாற்றம் இப்படி பல்வேறு இடர்பாடுகளில் விவசாயிகள் சிக்கி தவித்து ஒவ்வொரு அறுவடை முடிவதற்குள் விவசாயிகள் மறு ஜென்மம் எடுத்து வருகின்றனர்.

எப்படி ஒரு தாய் 10 மாதம் சுமந்து ஒரு பிள்ளையை பெறுகிறாரோ? அதுபோலத்தான் விவசாயத்தையும் பிள்ளையைப் போன்று வளர்த்து வருகின்றனர் நம்முடைய விவசாயிகள். இப்படி நம்முடைய பாரம்பரியமாக செய்து வந்த விவசாயத்தில் தற்போது வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு அதில் கொடிகட்டி பறக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆம்! அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் வாழைக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தற்போது சம்பா நடவு பணிகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழக தொழிலாளர்களுக்கு பதிலாக, வட மாநில தொழிலாளர்களை வைத்து நாற்று நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். காரணம் டெல்டா பகுதியில் ஆள் பற்றாக்குறை மற்றும் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழக விவசாய தொழிலாளர்களை தவிர்த்துவிட்டு, வடமாநில தொழிலாளர்களை நம்பி விவசாயம் செய்யக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி, வடமாநிலத் தொழிலாளர்களை வைத்து விவசாயம் செய்வதால் ஏக்கருக்கு ரூபாய் 5 ஆயிரம் வரை மிச்சப்படுவதாகவும், அவர்கள் சரியான நேரத்திற்கு வேலை ஆரம்பித்து, நேரத்தை வீணடிக்காமல் நடவுப் பணிகளை கண்ணும் கருத்துமாக செய்கின்றனர். அவர்களே நாற்றுக்கட்டுகளை தயார் செய்தும், நடவு பணிகளையும் அளவீடு செய்து ஒரு சேர திட்டமிட்டு குழுவாக விரைந்து செய்து முடிப்பதால், டெல்டா விவசாயிகளுக்கு நேரமும், பணமும் தேவையற்ற சுமைகளையும் அத்தொழிலாளர்கள் வெகுவாக குறைப்பதாக தா பழூர் டெல்டா விவசாயிகள் பெருமிதத்தோடு கூறுகின்றனர்.

இவர்களைப் பார்த்து மற்ற விவசாயிகளும் வட மாநில தொழிலாளர்களை கண்டறிந்து தூது விடுகின்றனர். இதனை பெருமைக்குரிய விஷயமாக கருதுவதா? அல்லது விவசாயத்தை காப்பதற்கு அரசு தவறி விட்டதா? என்று சமூக ஆர்வலர்களின் கேள்வியும் ஒரு பக்கம் எழுந்து வருகிறது. இதற்கெல்லாம் அரசு விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, பல்வேறு திட்டங்களை வகுத்து விவசாயத்தை காப்பதற்கு என்ன செய்ய முடியுமோ? அதை செய்தால் மட்டுமே பழையபடி நம்முடைய விவசாயத்தை உலக அளவில் எடுத்துச் செல்ல முடியும் என்பது விவசாயிகளின் கனவாக உள்ளது. விவசாயம் செழித்தால் மட்டுமே அனைவருக்கும் உணவு கிடைக்கும் என்பதை அரசு கவனம் கொள்ள வேண்டும் விவசாயம் செழிக்காவிட்டால் காலப்போக்கில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அரசு விவசாயம் செழிக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story