இலங்கை அரசின் இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயல் கடும் கண்டனத்திற்குரியது: ஓ.பன்னீர்செல்வம்
O.Panneerselvam
தமிழக மீனவர்களை சிறையில் கொடுமைப்படுத்திய இலங்கை அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மீனவர்கள் தங்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளக்கூடாது என்ற தீய நோக்கத்துடனும், தமிழக மீனவர்கள் மத்தியில் ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்தும் எண்ணத்துடனும் இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது. தங்களுடைய பாரம்பரியமான இடத்தில் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டிருந்த தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டியதாக பொய்க் குற்றம் சாட்டி அவர்களை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவது என்பது மிருகத்தனமான செயல். இலங்கை அரசின் இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. ஏழை மீனவர்களின் எதிர்காலத்தையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, இந்திய மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தொடர் தாக்குதல்கள் மற்றும் தொடர் துன்புறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்; இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்கவும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குத் தேவையான அழுத்தத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.