ரயில் நிலையங்களில் அதிகாரி ஆய்வு!

ஊட்டி , குன்னூர் ரயில் நிலையங்களில் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் நேரில் ஆய்வு செய்தார்.
ஊட்டி , குன்னூர் ரயில் நிலையங்களில் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் நேரில் ஆய்வு செய்தார். அதிக வருவாய், வரவேற்பு மற்றும் நகரங்களின் பாரம்பரிய சிறப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் 1,275 ரயில் நிலையங்களில் புதிய நவீன வசதிகளை நீண்ட கால சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் மேம்படுத்துவதற்காக 'அம்ரித் பாரத்' ஸ்டேஷன் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. ரயில் நிலையங்களில் குறைந்தபட்ச அடிப்படை தேவைகளை ஏற்படுத்துதல், எஸ்கலேட்டர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி, ரயில் நிலையத்தின் வடிவமைப்பு, 5-ஜி சேவை, நடைமேடைகளை மேம்படுத்துதல் மற்றும் ஏற்கனவே உள்ள வசதிகளை மேம்படுத்துதல் என்று நீண்டகால தேவையின் அடிப்படையில் புதிய நவீன வசதிகளுடன் இந்த ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும். அந்தவகையில் சேலம் கோட்டத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் ஆகிய ரயில் நிலையங்கள் ரூ. 15 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை மற்றும் ஒரு சில காரணங்களால் பணிகள் தாமதம் ஆகி வருகிறது. இந்நிலையில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா குன்னூர் மற்றும் ஊட்டி ரயில் நிலையங்களில் அம்ரூத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் திட்டமிட்ட காலத்திற்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது குன்னூர் ரயில் நிலைய மேலாளர் கோபி, ஊட்டி ரயில் நிலைய மேலாளர் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story