ஊட்டி மலர் கண்காட்சி நாளை துவக்கம்

ஊட்டி மலர் கண்காட்சி நாளை துவக்கம்

ஊட்டி மலர் கண்காட்சி

ஊட்டி அரசுத் தாவரவியல் பூங்காவில் 126வது மலர் கண்காட்சி நாளை துவங்கவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீஸன் துவங்கியுள்ள நிலையில் ஊட்டி அரசுத் தாவரவியல் பூங்காவில் நாளை 126வது மலர்கண்காட்சி நடைபெறுகிறது. இதைக் காண வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 75 ரகங்களில் 388 வகையான 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் பூத்துள்ள ஜெரோனியம் பால்சம் உள்ளிட்ட பல வண்ண மலர்கள், மலர் மாடத்தில் அடுக்கப்பட்டுள்ளன. மேலும் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள 6.5 லட்சம் மலர் செடிகளிலும் லட்சக்கணக்கான மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இந்த ஆண்டு தாவரவியல் பூங்காவிற்குள் உள்ள புது பூங்காவில் 10 ஆயிரம் மலர் தொட்டிகள் வைக்கபட்டுள்ளன.

மலர் கண்காட்சியின் முக்கிய வடிவமமான டிஸ்னி வேர்ல்டு உருவம் ஒரு லட்சம் ரோஜா மலர்களால் 30 அடி உயரம் 50 அடி அகலத்திற்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல 80 ஆயிரம் கார்னேசன் மலர்களால் நீலகிரி மலை ரயில் உருவம் தத்ரூபமாக அமைக்கப்படுகிறது. 16 ஆயிரம் மலர்களை கொண்டு 126- வது மலர்கள் காட்சி உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தாண்டு மலர் கண்காட்சியின் முதல் நாள் மற்றும் இறுதி நாளில் லேசர் லைட் ஷோ நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது . வழக்கமாக மலர் கண்காட்சியின் போது இருமடங்காக உயர்த்தப்படும் நுழைவு கட்டணம் இந்தாண்டு அதைவிட அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story