அப்பர் பவானியில் இருந்து கோவைக்கு தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை
அப்பர் பவானியில் இருந்து கோவைக்கு தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை
தமிழகத்தின் தண்ணீர் தொட்டி என்று நீலகிரி மாவட்டம் அழைக்கப்படுகிறது. சமவெளியில் பாயும் நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதியாகவும் விளங்குகிறது. இங்கு உற்பத்தியாகும் மாயாறு, பவானி ஆகிய இரு ஆறுகளும் கோவை, ஈரோடு மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவையை பூர்த்தி செய்து, காவிரியுடன் கலந்து டெல்டா மாவட்டங்களை சென்றடைகிறது.
இதேபோல் 60 சதவீதத்திற்கும் அதிகமாக வனப்பகுதி இருப்பதால் ஆண்டில் சுமார் 94 நாட்கள் மழை பெய்யும். அதாவது மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகள் மூலம் ஆண்டிற்கு சுமார் 1250 மில்லி மீட்டர் மழை பொழிவு இருக்கும். மலை மாவட்டம் என்பதால் குந்தா, பைக்காரா புனல் நீர்மின் திட்டத்தின் கீழ் உள்ள 12 மின் நிலையங்கள் மூலமாக 833 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய வசதிகள் உள்ளது. இதன்படி வழக்கமான நேரங்களில் தினசரி 400 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு, நீலகிரி மாவட்டத்துக்கு 100 மெகாவாட் பயன்படுகிறது. மீதமுள்ள மின்சாரம், ஈரோடு கிரீட்டுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து தமிழகம் முழுவதும் வினியோகிக்கப்படுகிறது.
தற்போது கோவை, நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. நீலகிரி அணைகளில் மின் உற்பத்தி 80 சதவீதம் குறைந்து விட்டது. கோவை மாநகரில் 100 வார்டுகளில் உள்ள 23 லட்சம் மக்களுக்கு, 20 சதவீதம் சிறுவாணி தண்ணியும், 70 சதவீதம் பில்லூர் தண்ணியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே தற்போதுள்ள கடும் வறட்சியை சமாளிக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு வந்தனர். இதன்படி நீலகிரி அப்பர் பவானி அணையில் இருந்து பில்லூருக்கு தண்ணீர் கொண்டு சென்று அங்கிருந்து கோவை மக்களுக்கு தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் உத்தரவுப்படி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியியல் இயக்குனர் நடராஜன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் செல்லமுத்து ஆகியோர் தலைமையிலான குழுவினர் இன்று அப்பர்பவானி அணையில் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: 210 அடி உயரம் கொண்ட ஊட்டி அப்பர்பவானி அணையில் தற்போது 60 அடிக்கு தண்ணீர் உள்ளது. இவ்வளவு குறைந்த தண்ணீரை வைத்து மின் உற்பத்தி செய்ய முடியாது. எனவே தேவை உள்ள, கோவை நகருக்கு இந்த தண்ணீரை கொண்டு செல்ல திட்டமிட்டு கடந்த 30ம் தேதி முதல் அப்பர் பவானி அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. அப்பர் பவானி அணை சுரங்கப்பாதை வழியாக வெளியேற்றப்படும் தண்ணீர் அத்திக்கடவு வழியாக பில்லூர் செல்கிறது. தற்போது 200 கனஅடி தண்ணீர் தினசரி எடுக்கப்படுகிறது. பில்லூர் குடிநீர் திட்டம் 1995ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து இதுவரை இவ்வளவு பற்றாக்குறை ஏற்படாததால், அப்பர் பவானி அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்படவில்லை. 29 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக அப்பர் பவானி அணையில் இருந்து கோவைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த தண்ணீரை ஜூன் 15ம் தேதி வரை கோவைக்கு விநியோகம் செய்யப்படும். அதற்கு பின்னர் மழை பெய்ததும் நிலைமை சமாளிக்கப்படும். இதேபோல் மற்றொரு ஏற்பாடாக 130 அடி உயரமுள்ள போர்த்திமந்து அணையில் தற்போது 50 அடிக்கு தண்ணீர் உள்ளது. இங்கிருந்து மின் மோட்டார் உதவியுடன் எமரால்டு அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து குந்தா வழியாக பில்லூர் கொண்டு செல்லப்பட்டு அந்த தண்ணீரும் கோவை மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.