ஒரத்தூர் நீர்த்தேக்கம், வரதராஜபுரம் தடுப்பணையால் பயனில்லை

ஒரத்துார் நீர்த்தேக்கம் பணி 80 சதவீதம் முடிந்த நிலையில், 420 மீட்டர் கரை அமைக்காமல் விட்டதால், அதிக அளவில் தண்ணீர் வெளியேறி, வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கின. வரதராஜபுரம் அணைக்கட்டு தாங்கல் ஏரி, முடிச்சூர் தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி, திட்டமிட்டபடி தடுப்பணை அமைத்தால் வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளில் வெள்ள பாதிப்பு மேலும் குறையும்.
எனவே, தமிழக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மக்கள் பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், எதிர்கால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம், முடிச்சூர் உள்ளிட்ட புறநகர் பகுதியில் வெள்ள பாதிப்பை தடுக்க, ஒரத்துாரில் 56 கோடி ரூபாய் மதிப்பில், அடையாறு கிளை கால்வாய் குறுக்கே இரண்டு ஏரிகளை இணைத்து, புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகள், 2019ல், அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கின.
இந்த நீர்த்தேக்கத்திற்காக அடையாறு கிளை கால்வாய் குறுக்கே ஐந்து கண் மதகு அமைத்து, அங்கிருந்து ஆரம்பாக்கம் ஏரி வரை கரை அமைக்கப்பட்டது. இதேபோல, மதகில் இருந்து ஒரத்துார் ஏரி வரை 420 மீட்டருக்கு கரை அமைக்கும் பணிக்கு, நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியது.
நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து, 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், நீர்த்தேக்க பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
