உடல் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு மறு வாழ்வு

மன்னார்குடி அருகே சாலை விபத்தில் காயமடைந்து மூளைச்சாவடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் 5 பேர் மறுவாழ்வு பெற்றனர்.

திருவாரூர் மாவட்டம் எடமேலையூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ். இவரது மனைவி பாப்பாத்தி (65),. இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, மன்னார்குடி அருகே மேலவாசல் பகுதியில் தனது உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு, மீண்டும் ஊருக்கு செல்வதற்காக பாப்பாத்தி சாலையில் நடந்து சென்ற போது, இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கீழே விழுந்து, தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து பாப்பாத்தி சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பாப்பாத்தியின் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளதால், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்.

பிறகு, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாப்பாத்தி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து மருத்துவர்களின் தகவலின் பேரில் பாப்பாத்தியின் குடும்பத்தினர், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

அதன்பிறகு, அறுவை சிகிச்சை மூலம், இரண்டு கண்கள், சிறுநீரகம், கல்லீரல் எடுக்கப்பட்டு, தஞ்சாவூர் அரசு ராசாமிராசுதார் மருத்துவமனையில் இருவருக்கு இரண்டு கண்களும், ஒரு சிறுநீரகம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், மற்றொறு சிறுநீரகம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒருவருக்கும், கல்லீரல் திருச்சி அரசு மருத்துவமனையில் ஒருவருக்கும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், பாப்பாத்தியின் சில தோல் பகுதிகளில், தோல் வங்கியில் சேமிக்கப்பட்டுள்ளன என மருத்துவக்கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாப்பாத்தி உடலுக்கு அரசு சார்பில், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் மற்றும் மருத்துவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது உடல் சொந்த ஊரில் சனிக்கிழமை தகனம் செய்யப்பட்டது. இது குறித்து, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் கூறியதாவது; இதுவரை மருத்துவக்கல்லூரியில் ஏழு உடல் உறுப்புகள் தானம் நிகழ்ந்துள்ளது. 13 பேருக்கு சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது. உயிர் பிரியும் போது ஒரு மனிதனின் உறுப்புகள் தானம் செய்வதால் 12 நபர்கள் மறுவாழ்வு பெறுகின்றனர்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story