தேர்தல் சதுரங்கத்தில் செக் வைக்கும் திமுக - ஒரு தொகுதி கேட்டால் அரசு வேலை கிடைக்குமா..?

தேர்தல் சதுரங்கத்தில் செக் வைக்கும் திமுக - ஒரு தொகுதி கேட்டால் அரசு வேலை கிடைக்குமா..?
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் மாஸ்டர் பிளான் போட்டு காய்நகர்த்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு ஒரு தொகுதி தான் வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி அடம்பிடித்து கொண்டிருக்கும் நிலையில், தொகுதியை எல்லாம் விட்டுக் கொடுக்க முடியாது, அரசு பதவி தருகிறோம் என ஹஜ் கமிட்டி தலைவர் பதவியை கொடுத்து ஆஃப் செய்துள்ளது திமுக தலைமை. அரசியல் கட்சியின் சதுரங்க வேட்டையில் மனித நேய மக்கள் கட்சிக்கு பலம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாடாளுமன்றத்தின் மக்களவை பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் முடிய உள்ளது. இதனால், நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் அதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. ஒரு பக்கம் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வரும் அதே வேளையில், மறுபக்கம் அரசியல் கட்சிகளும் கூட்டணி பேரத்தை பேசி வருகின்றன.

தேசிய கட்சிகள் முதல், மாநிலத்தின் பிரதான கட்சிகள் வரை தங்களுக்கான கூட்டணியை அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தனது தோழமை கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக் கட்சிகளோடு முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதால், பாஜக தனித்து களம் காண தயாராகி உள்ளது. இம்முறை பிரதமர் மோடியின் பார்வை தென்னிந்திய மாநிலங்கள் மீதும் குறிப்பாக தமிழகத்தின் மீது உள்ளது. பலமாக தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்ற அடிப்படையில் பாஜக தலைமை தேர்தல் பணியில்கள் தீவிரம் காட்டி வருகிறது.

தற்போது நடைபெற உள்ள தேர்தல் வாய்ப்பை பாஜக பயன்படுத்திட கூடாது என்பதில் கவனமாக இருக்கும் திமுக கூட்டணி பேச்சிவார்த்தையில் ஆழமாக சிந்தித்து ஒரு தொகுதியை கூட விட்டுக் கொடுக்க கூடாது என்ற நிலையில் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் தான், நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் அக்கட்சியில் நடந்த மனித நேய மக்கள் கட்சி செயற்குழு கூட்டத்திலும் நாடாளுமன்ற தேர்தலின் தொகுதி ஒதுக்கீடு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள ஏனைய இஸ்லாமிய அமைப்புகளுக்கு மத்தியில் மனிதநேய மக்கள் கட்சி ஓரளவு வலிமையான கட்டமைப்போடும், வாக்கு வங்கியுடனும் இருந்து வருகிறது. இதனால் இஸ்லாமியர்களின் ஓட்டு முக்கியம் என உணர்ந்த திமுக தலைமை, அக்கட்சியை விட்டுக் கொடுக்க மனமில்லாமல் வேறொரு வழியில் முடிவெடுத்துள்ளது. இருக்கும் 39 சீட்டுகளை தோழமை கட்சிகளுக்கு பிரித்து கொடுப்பதில் சிக்கல் இருப்பதால் மனித நேய மக்கள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால், அக்கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்ய முன்வராத திமுக, அந்த கட்சியை சமாதானப்படுத்தவும், இஸ்லாமியர்களின் வாக்குகளை தக்க வைக்கவும் மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ அப்துல் சமதுக்கு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் பொறுப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவராக சட்டமன்ற உறுப்பினர் P.அப்துல் சமத் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக முஸ்லீம் லீக் கட்சி 2 சீட்டுகளை பெற்றிட வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறது. இருந்தாலும், சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொள்வதாக கூறும் திமுக முஸ்லீம் வாக்குகளை தக்க வைத்து கொள்ள ஒரு சீட் கொடுத்து தான் ஆக வேண்டும் என்பதில் கராராக இருந்து வருகிறது லீக் கட்சிகள். எனினும், யாருக்குக்கு எத்தனை சீட் தரப்படும் என்பது தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் தான் தெரிய வரும்.

Tags

Next Story