பட்டுக்கோட்டை: சாதி ஆணவ கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள நெய்வவிடுதியை சேர்ந்தவர் பெருமாள் - ரோஜா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா (19). அருகில் உள்ள பூவாளூரை சேர்ந்த பாஸ்கர் மகன் நவீன் (19) பொறியியல் பட்டயப் படிப்பு படித்துள்ளார். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் அரவம்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் இருவரும் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் கடந்த டிச.31-ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் ஐஸ்வர்யாவும் நவீனும் திருமணம் செய்து கொண்டதோடு, வீரபாண்டி அருகே வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இதை அறிந்த ஐஸ்வர்யாவின் தந்தை மற்றும் உறவினர்கள் கடந்த ஜன. 2-ஆம் தேதி பல்லடம் சென்று அங்கு காவல்நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் ஐஸ்வர்யாவை கண்டுபிடித்து தந்தை மற்றும் உறவினருடன் அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து ஜன.3-ஆம் தேதி ஐஸ்வர்யாவை சொந்த ஊருக்கு அழைத்து வந்த அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அவரை கொலை செய்து உடலை எரித்து விட்டதாக நவீன் வாட்டாத்திக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஐஸ்வர்யாவின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் என 15க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மாற்று சாதியைச் சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்ததால், ஐஸ்வர்யாவை அவரது பெற்றோரே அடித்து கொலை செய்து பின்னர் சடலத்தை எரித்தது தெரிய வந்தது. இதையடுத்து ஜன.10-ஆம் தேதி ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள்(50), தாயார்(45) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் ஐஸ்வர்யாவின் உடலை எரித்து தடயங்களை மறைக்க உறுதுணையாக இருந்ததாக, பெருமாளின் உறவினர்களான சின்னராசு(30), திருச்செல்வம்(39), முருகேசன்(34) ஆகிய மூவரையும் புதன்கிழமை கைது செய்தனர்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா கொலை வழக்கில் தடயங்களை மறைக்க உதவியதாக, நெய்வவிடுதியைச் சேர்ந்த ஆ.ரெங்கசாமி(57), சூ.பிரபு(36) பா.சுப்பிரமணியன் (56) ஆகிய மூவரையும் வாட்டாத்திக்கோட்டை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.