பிளாஸ்டிக் பயன்படுத்திய தனியார் கிளப்புக்கு அபராதம்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய தனியார் கிளப்புக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை கணக்கில் கொண்டு 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாடு நீலகிரி மாவட்டத்தில் ஓரளவு குறைந்தாலும், முழுமையாக குறையவில்லை. இதனால் சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை சீஸன் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவு நீலகிரிக்கு வருகின்றனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை சமவெளி பகுதியில் இருந்து கொண்டு வருகின்றனர். எனவே நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவின் பேரில், ஊட்டியில் நகர் நல அலுவலர் ஸ்ரீதரன் தலைமையிலான குழுவினர் இன்று பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். இதில் பஸ் நிலையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிளப்பில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் இருந்தது தெரிய வந்தது. அந்த கிளப்புக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் வரும் நாட்களில் சோதனையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags

Next Story