பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை - அமைச்சர்
அமைச்சர் மனோ தங்கராஜ்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது :- மிக முக்கியமான ஒரு தேர்தலை நாடு எதிர்கொண்டிருக்கிறது. ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்ற கேள்வி இன்று மக்கள் மனதில் எழுந்துள்ளது. கவர்னர், எம்பி, எம்.எல்.ஏ ஆகியோர்களை வேட்பாளராக பாஜக நடத்தியுள்ளது.அவரிடம் சரியான வேட்பாளர்கள் இல்லை என்பதை இது காட்டுகிறது.
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு போட்டியிடுகின்றவர்கள் வெற்றி பெற தேர்தல் பணியாற்றுகிறோம். கடந்த ஆட்சியாளர்கள் செய்த தவறுகளை விசாரிக்க வேண்டும் என்று பலர் கோரிய நேரத்தில் இந்த ஈ.டி என்ன செய்து கொண்டு இருந்தது? இப்போது கூட்டணி போய்விட்டது. உடனே கழுத்தை பிடிக்கிறார்கள். அவர்களுடன் இருப்பவர்களுக்கு ஒரு நியாயம். மற்றவர்களுக்கு மற்றொரு நியாயம். ஈடி இதுவரைக்கும் செய்த சோதனையில் 6000 ஆகும்.
இதில் 95% எதிர்க்கட்சிகளையும், எதிர் கருத்து கொண்டவர்களையும் குறி வைத்து நடத்தப்பட்டு இருக்கிறது. தமிழக கவர்னருக்கு உச்ச நீதிமன்றம் கெடு என்பது நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் பாண்டிச்சேரியிலும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்.பிரதமர் செய்கின்ற வெறுப்பு பிரச்சாரத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். என்றோ நடந்த வெடிகுண்டு சம்பவத்தை ஞாபகப்படுத்தி நீலிகண்ணீர் வடிக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.