பள்ளி அருகில் திருமண மண்டபம் - போராட்டத்தில் குதித்த மக்கள்
திருமண மண்டபம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்
உயர்நிலை பள்ளி அருகில் திருமண மண்டபம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த பல்லகச்சேரி கிராமத்தில் பெரியேரியை ஒட்டியுள்ள புற்று மாரியம்மன் கோவில் அருகே, அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கோவிலையொட்டி தனி நபர் ஒருவர் திருமண மண்டபம் கட்டுவதற்கான பணிகளை 8 மாதங்களுக்கு முன் துவக்கினார். பள்ளி அருகே திருமண மண்டபம் கட்டினால், மாணவர்களுக்கு சிரமம் ஏற்படும் என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனுவும் அளித்தனர். கலெக்டர் ஷ்ரவன்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனால் மண்டபம் கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.இந்நிலையில் நேற்று மீண்டும் கட்டடம் கட்டும் பணி துவங்கியது. இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் பள்ளிக்கு எதிரே, சங்கராபுரம் - தியாகதுருகம் சாலையில் நேற்று காலை 11:00 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். தியாகதுருகம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் முன்வராததையடுத்து மீண்டும் நாளை (இன்று) மறியல் போராட்டம் தொடரும் என அறிவித்து காலை 11:45 மணிக்கு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story