ஏழைக்குழந்தையின் ஆசையை நிறைவேற்றி தந்த பேராவூரணி எம்எல்ஏ 

சுற்றிலும் இருப்பவர்கள் தீபாவளி கொண்டாடும் நிலையில், வறுமை நிலையில் இருக்கும் குழந்தை தானும் பட்டாசு வெடிக்க வேண்டும். புத்தாடைகளை அணிய வேண்டும் என்று ஆசைப்படவே தகவல் அறிந்த பேராவூரணி எம்எல்ஏ அவர்களை வரவழைத்து புத்தாடை, பட்டாசு, இனிப்பு வாங்கி கொடுத்து, ரொக்கப் பணமும் வழங்கி உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் நடுத்தெருவை சேர்ந்தவர் மைக்கேல்.

இவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி ஜாக்குலின் ரோஸ்மேரி (வயது 40) இவர் நூறுநாள் வேலைக்கு செல்வது, சித்தாள் வேலை, நடவு வேலை என கிடைக்கும் கூலி வேலைக்குச் சென்று வருகிறார். இவர்களுக்கு புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் வருண் சபரி (13) என்ற மகனும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஜெனிஃபர் மேரி (10) என்ற மகளும் உள்ளனர்.


இந்நிலையில் புனல்வாசல் கிராமத்தில் குடிசை வீட்டில் வசித்து வரும் குழந்தைகளுக்கு சுற்றிலும் உள்ள மக்கள் தீபாவளி பண்டாடியை கொண்டாடுகையில், தாங்களும் பட்டாசு வெடிக்க வேண்டும். புத்தாடை அணிய வேண்டும் என்ற ஆசை குழந்தைகளுக்கு இயல்பாகவே எழுந்துள்ளது. குழந்தைகள் இருவரும் தங்கள் தாயிடம் சொல்லி அழுகவே, ஆசையை நிறைவேற்ற முடியாமல் தாய் கலங்கி நின்றார். இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் மூலம் பேராவூரணி எம்எல்ஏக்கு நா.அசோக்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தாயையும், குழந்தைகளையும் வரவழைத்த பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் அவர்களுக்கு பிடித்த உடையை எடுத்துக் கொள்ளச் சொல்லி ஜவுளிக்கடைக்கு அனுப்பி வைத்தார்.

தாயாருக்கு புடவை, ஜாக்கெட் பெண் குழந்தைக்கு சுடிதார், பையனுக்கு ஜீன்ஸ் பேண்ட் சட்டை என எடுத்து கொடுத்த எம்எல்ஏ பட்டாசுகளும், இனிப்புகளும் வாங்கி கொடுத்தார். மேலும், அவர்களை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று ரொக்கப் பணம் ரூ.5 ஆயிரத்தையும் வழங்கினார் அப்போது தன் இரு குழந்தைகளுக்கும் இதயத்தில் பாதிப்பு இருப்பதாகவும், சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மேலும், "தீபாவளி கொண்டாட முடியாமல் குழந்தைகள் கேட்டும், என்னால் அவர்கள் ஆசையை நிறைவேற்ற முடியாமல் தவித்த நிலையில் உங்கள் உதவியை என்னால் மறக்க முடியாது" என காலில் விழுந்து நன்றி தெரிவித்தார். அதனைத் தடுத்து, அவர்களை ஆதரவுடன் தட்டிக் கொடுத்த எம்எல்ஏ வேண்டிய உதவிகளை செய்வதாக கூறி, வீட்டிற்கு எப்படி செல்வீர்கள் என்று கேட்டதோடு, தன்னுடைய காரிலேயே அவர்களை ஏற்றி 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புனல்வாசலில் உள்ள அவர்கள் வீட்டில் கொண்டு போய் விட்டு வரச் செய்தார். ஏழைக் குழந்தைகளுக்கு உதவிய எம்எல்ஏவின் செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story