இந்து பக்தர்களுக்கு வரவேற்பளித்த இஸ்லாமிய இளைஞர்கள்
பக்தர்களை வரவேற்க காத்திருக்கும் ஜமாத் நிர்வாகிகள், இளைஞர்கள்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில்பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் கோவில் சித்திரை திருவிழாவிற்கு காவடி எடுத்து வந்த பக்தர்களை ஜமாலியா மஸ்ஜித் ஜமாத்தார்கள் மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் வரவேற்று பழங்கள், குளிர்பானங்கள், மோர் பாக்கெட், தண்ணீர் பாட்டில்களை வழங்கினர்.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக, 9 ஆம் நாளான, திங்கட்கிழமை அதிகாலை 3 மணி முதல் பேராவூரணி மற்றும் 50க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள், பக்தர்கள், பால்குடம், காவடி, மயில் காவடி, பறவை காவடி என பல்வேறு காவடிகளை எடுத்தும், அலகு குத்தியும், தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற நீலகண்டப் பிள்ளையார் ஆலயத்திற்கு வந்தனர். தொடர்ந்து மாலை 5 முதல் 6 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி ஆங்காங்கே பல்வேறு அமைப்புகளின் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டும், அன்னதானம் வழங்கப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, பேராவூரணி ஜமாலியா மஸ்ஜித் இஸ்லாமிய இளைஞர்கள் சார்பில், பழங்கள், குளிர்பானங்கள், மோர் பாக்கெட், தண்ணீர் பாட்டில் அடங்கிய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பைகள் பக்தர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேலும் காவடி எடுத்து வரும் இளைஞர்களுக்கு பள்ளிவாசல் முன்பு அமைக்கப்பட்ட மேடையில் வரவேற்பு அளிக்கப்பட்டு, கோடையின் வெப்பத்தை தணிக்கும் வகையில் குழாய் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இது குறித்து பள்ளிவாசல் ஜமாத் செயலாளர் ஏஷியன் சம்சுதீன் கூறுகையில், " மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இஸ்லாமிய இளைஞர்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் பக்தர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு அன்பளிப்புகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஊரிலும் இஸ்லாமியர்கள் இதுபோல் செய்தால் மத நல்லிணக்கம். பாதுகாக்கப்படும் முன்னோர்கள் கட்டிக் காத்த சமய நல்லிணக்கம் பேணப்படும்" எனத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஜமாஅத் தலைவர் கே.அப்துல் முத்தலிப், செயலாளர் ஏஷியன் ஹெச்.சம்சுதீன், பொருளாளர் கே.கான் முகமது, இஸ்லாமிய இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் ஆங்காங்கே சிற்சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றாலும், இது போல் மத நல்லிணக்கம் பேணும் நிகழ்ச்சிக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.