விதிமீறும் பட்டாசு ஆலைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை - அமைச்சர்

விதிகளை மீறி மீறும் பட்டாசு ஆலை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆலைகளை நிரந்தரமாக மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமு தேவன் பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பத்து தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர். மேலும் 4க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயத்துடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண் தொழிலாளியை தமிழக வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.மேலும் இந்த பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து அமைச்சர்கள் ஆறுதல் கூறினார்கள்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை மூலம் எவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தாலும் அதையும் மீறி ஒரு சில மனித தவறுதல்களால் விபத்து நடந்து விடுகிறது. இன்று நடைபெற்ற வெடிவிபத்தில் 10 நபர்கள் இறந்திருக்கிறார்கள். 6 பேர் காயம் அடைந்துள்ளார்கள். அதில் மூன்று நபர்கள் படுகாயமாக இருக்கிறார்கள். 3 நபர்கள் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கு முன்னால் நடந்த பட்டாசு வெடி விபத்தின் காரணமாக பட்டாசு ஆலைகள் முழுவதுமாக கண்காணிக்கப்பட்டு சுமார் 30 ஆலைகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கண்டறியப்பட்டு தற்போது வரை அந்த ஆலைகள் மூடப்பட்டு இருக்கின்றன. இவ்வளவு கட்டுப்பாட்டிற்கு மத்தியிலும் இந்த விபத்துகள் நடந்திருக்கின்றன. தொடர்ந்து இது போன்ற விபத்துக்கள் நடக்காதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் பேசிய அமைச்சர் மருந்து கலவை கலக்கப்படும் அறையில் அளவுக்கு அதிகமாக நபர்கள் பணியாற்றுவது முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மேலும் இதை எதிர்காலத்தில் சரி செய்வதற்கான நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என்றார். மேலும் விதிகளை மீறி மீறும் பட்டாசு ஆலை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆலைகளை நிரந்தரமாக மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

பின்னர் பேசிய தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி வி கணேசன் பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் நடக்காமல் இருப்பதற்கு தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் என அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இருக்கின்றன. அதில் 800-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் ஒரு விபத்து கூட நடக்காமல் இருந்திருக்கிறது. இதுபோன்ற ஓரிரு நிறுவனங்கள் தான் தடுக்க முடியாத சூழ்நிலைகளில், விதிமுறை மீறலாலும், மனித தவறுகள் காரணமாகவும் விபத்துக்கள் நடக்கின்றன. அதனையும் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் எடுக்கும் என தெரிவித்தனர்.

Tags

Next Story