வடபழனி முருகன் கோவிலில் திருத்தேரோட்டம்
வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது, 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. முதல் நாள் மூஷிக வாகன புறப்பாடு கொடியேற்றம் தொடங்கி மங்களகிரி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா, சூரிய மற்றும் சந்திர பிரபை, ஆட்டுக்கிடா வாகன புறப்பாடு உள்ளிட்டவை ஒவ்வொரு நாளும் நடைபெற்றது. காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் வள்ளி தெய்வானையுடன் முருகன் கோவில் மாட வீதிகளில் வீதி உலா வந்தார். இன்று காலை வடபழனி முருகன் கோவிலில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் ஒய்யாளி உற்சவமும் நடைபெறும். நாளை இரவு குதிரை வாகன புறப்பாடும் , நாளை மறுநாள் இரவு ஆண்டவர் வீதி உலா நடைபெற உள்ளது. தொடர்ந்து, வைகாசி விசாக விழா வரும் 22 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. அன்று வள்ளி, தெய்வானை சமேத சண்முகர் வீதி உலா, தீர்த்தவாரி உற்சவம், கலசாபிஷேகம், திருக்கல்யாண உற்சவம், மயில்வாகன புறப்படும் நடைபெற உள்ளது.
இன்று பிரம்மோற்சவம் உற்சவத்தில் சிறப்பு நிகழ்வாக திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் கோவில் வீதிகளில் வலம் வந்தார். அதற்காக வடபழனி முருகன் கோவில் முன்பாக நூற்றுக்கணக்கான பக்தர்கள் காலை முதலே தரிசனம் செய்ய காத்துக் கொண்டுள்ளனர். இன்று சுப முகூர்த்த தினம் என்பதால் திருமண வைபவங்களும் கோவிலை சுற்றி அதிகம் நடப்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காவல் துறையினர் கோவிலுக்கு வரக் கூடிய அனைத்து வழிகளிலும் பேரிகார்டுகள் அமைத்து கூட்ட நெரிசல் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணியில் உள்ளனர். கோவிலுக்கு பின்புறம் வாகனங்கள் நிறுத்த தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேள தாளங்களும் , சங்கு நாதமும் முழங்க திருத்தேரோட்டம் நடைபெற்றது.