காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த திட்டம்

தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பயனடையும் வகையில் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மேலும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பயனடையும் வகையில் வரும் கல்வி ஆண்டு முதல் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

வரும் கல்வியாண்டில் (2024 2025) இத்திட்டம் ஊரகப்பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியருக்கு பயன் பெறும் நோக்கில் விரிவுபடுத்தப்பட உள்ளது. சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மற்றும் பள்ளிகல்வி துறை ஆகிய துறைகள் இணைந்து இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

-காலை உணவு வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்ட அரசு உதவிபெறும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்திற்கு வழங்கப்பட்டது போல் இத்திட்டத்திற்கும் அப்பள்ளியிலேயே தனியாக உணவுப் பொருட்கள் வைப்பதற்கும். சமையல் செய்வதற்கும் தேவையான இடவசதி அமைத்து கொடுப்பதற்கும். இத்திட்டம் முழுமையாகவும், செம்மையாகவும் செயல்படுத்துவதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பு வழங்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளித் தாளாளர்/பள்ளித் தலைமையாசிரியருக்கு அறிவுறுத்திடவும். அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களையும் தொடக்கக்கல்வி அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் மாவட்டக் கல்வி அலுவலர்களை உள்ளடக்கிய ஒரு குழு அமைத்து 1 வார காலத்திற்குள் அப்பள்ளிகளை பார்வையிட்டு காலை உணவுத் திட்டம் செயல்படுத்துவதற்குத் தேவையாக அனைத்து வசதிகளும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊரக வளர்ச்சி சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலர்களை இணைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி மாவட்ட அளவில் இத்திட்டத்தினை சிறப்பாகவும், செம்மையாகவும் செயல்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.

Tags

Next Story