சேலம் தொகுதியை டார்கெட் செய்த பாமக - எடப்பாடிக்கு வந்த புதிய சிக்கல்

சேலம் தொகுதியை டார்கெட் செய்த பாமக - எடப்பாடிக்கு வந்த புதிய சிக்கல்
அதிமுக- பாமக கூட்டணி
பாமகவால் அதிமுக சிட்டிங் எம்.ஏல்.ஏ. மணி அப்செட்டில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு

நாடாளுமன்ற தேர்தலில் சேலம் தொகுதியை பாமக கேட்டு அடம்பிடிப்பதால், அதிமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏ.வால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சேலம் தொகுதியை பாமக டார்கெட் செய்ய காரணம் ஏன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேர்தல் கூட்டணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் தேமுதிகவை உறுதி செய்யும் பணிகள் உச்சக்கட்டமாக நடந்து வருகிறது. ஏற்கெனவே பாமகவின் இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ளன. முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பாமக நிறுவனர் ராமதாஸை நேரில் சந்தித்து கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் பேசியுள்ளார். அதில் 7 மக்களவை தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை தொகுதியையும் ஒதுக்குமாறு அதிமுகவிடம் பிடிவாதம் பிடித்து வருகிறது பாமக.

கடந்த முறை நடந்த மக்களவை தேர்தலில் தர்மபுரி, விழுப்புரம் தனித்தொகுதி, அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 7 தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை தொகுதியையும் தேசிய ஜனகநாயகக் கூட்டணியில் இருந்த பாமகவுக்கு அதிமுக ஒதுக்கியது. அதனால் இந்த முறையும் தருமபுரி, ஆரணி, அரக்கோணம், சிதம்பரம் தனித்தொகுதி, விழுப்புரம் தனித்தொகுதி, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 7 தொகுதிகள் பாமகவின் டார்க்கெட்டாக உள்ளது. இந்த தொகுதிகளை ஒதுக்கீடு செய்தால் அதிமுகவுடன் கூட்டணி என பாமக பிடிவாதமாக கூறி வருகிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமி கிரீன் சிக்னல் காட்டியதாகவும் கூறப்படுகிறது.

இப்படி தனித்தொகுதிகளையும், குறிப்பாக சேலம் தொகுதியையும் பாமக குறி வைத்திருப்பதற்கு அதிமுக கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இம்முறை சேலம் தொகுதியை கேட்கும் பாமக, அங்கு தனது கட்சியின் வன்னியர் சங்க மாநில பொதுச் செயலாளராக உள்ள கார்த்திக்-ஐ போட்டியிட தேர்வு செய்துள்ளது. இதற்காக தான் சேலம் தொகுதி வேண்டும் என ராமதாஸ் கூறி வருகிறாராம். அதேநேரம், ஓமலூரை சேர்ந்த ஜெ.பேரவை மாநில இணை செயலாளரான விக்னேஷ்வரன், சேலம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். சேலம் தொகுதியை விக்னேஷ்வரனுக்கு ஒதுக்க எடப்பாடியும் ஓகே சொல்லியுள்ளார். இந்த சூழலில் தான் பாமக சேலம் தொகுதியை கேட்டுள்ளது.

ஏற்கெனவே தேசிய கட்சியான பாஜக கூட்டணி முறிந்த நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு பிறகு தேமுதிக பலமும் குறைந்துள்ளதால், ஓரளவுக்கு செல்வாக்கு கொண்ட பாமக கூட்டணியை விட்டு கொடுக்க மனமில்லாமல் அதிமுக விழிப்பிதுங்குகிறது. இதற்கிடையே பாமகவுடன் பாஜகவும் கூட்டணி பேசி வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் பாமகவின் கூட்டணியை விட்டுக் கொடுக்க மனமில்லாத எடப்பாடி பழனிசாமி, சேலம் தொகுதியை விட்டுக் கொடுக்க முடிவெடுத்துள்ளார். சேலம் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்குவதால், கட்சியில் செல்வாக்கு கொண்ட விக்னேஷ்வரன் அதிருப்தியில் உள்ளாராம். விக்னேஷ்வரனின் மைத்துனர் தற்போது ஓமலூரின் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் மணி. இவரை வைத்து தனதுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்ய எடப்பாடி பழனிசாமியிடம் விக்னேஷ்வரன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஆனாலும், பாமகவை விட்டுக் கொடுக்க மனமில்லாத எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ. மணி மற்றும் விக்னேஷ்வரனை சமாதானம் செய்து வைத்துள்ளாராம். இதன்மூலம் சேலம் தொகுதியை பிடிவாதமாய் வாங்கியுள்ளது பாமக. எடப்பாடி பழனிசாமி எடுத்த இந்த முடிவு அதிமுகவுக்கு சாதகமாக இருக்குமா என்று கட்சி நிர்வாகிகளே கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags

Next Story