பிரதமர் மோடி சென்னை வருகை; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தருவதை முன்னிட்டு, 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நாளை (19.01.2024) சென்னை, பெரியமேட்டிலுள்ள, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில், கேலோ இந்தியா யூத் கேம்ஸ்-2023 விளையாட்டு போட்டியை துவக்கி வைக்கிறார். அதன்பேரில், பாரத பிரதமர் அவர்கள் சென்னை வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், அவர்கள் தலைமையில், கூடுதல் காவல் ஆணையாளர்கள். இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது.

அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள், காவல் இணை ஆணையாளர்கள், காவல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவுகளின் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், ஆயுதப்படை, கமாண்டோ. தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல் ஆளிநர்கள் உள்பட 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் அவர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறும் சென்னை. பெரியமேடு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னை விமான நிலையம், கிண்டி ஆளுநர் மாளிகை மற்றும் அடையாறு கடற்படை தளம் ஆகிய இடங்களிலும். அதன் சுற்றுப்புறங்களிலும், சென்னையில் செல்லும் வழித்தடங்களிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சென்னையில் உள்ள லாட்ஜுகள், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளிலும் சோதனைகள் மேற்கொண்டு சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா என கண்காணித்து வருகின்றனர்.

மேலும், முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர, சென்னையில் உள்ள முக்கிய இரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் காவல்துறையினர் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் பிரதமர் வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், பிரிவு 144ன் கீழ் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் (Drones) மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Unmanned Aerial Vehicles) பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ-லைட் ஏர்கிராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகர காவல் எல்லையில் பறக்க விட, 01.01.2024 முதல் 29.2.2024 வரை தடை செய்யப்பட்ட ஆணை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளான சென்னை சர்வதேச விமான நிலையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, ராஜ் பவன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், மேலும் ஐ.என்.எஸ். அடையார் முதல் பெரியமேடு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் வரை, அங்கிருந்து ராஜ் பவன் வரையிலும் மற்றும் ராஜ் பவனிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் வரையிலும் பிரதமரின் பாதுகாப்பு வாகனம் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு (RED ZONE), அந்த பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் (DRONE CAMERA) மற்றும் எந்தவிதமான பறக்கும் பொருட்கள் பறக்கவிட, 19.1.2024 மற்றும் 20.1.2024 ஆகிய இரு நாட்கள் உட்பட, மேற்குறிப்பிட்டவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story