மோடியின் கோணல் புத்தியால் நாடு சீரழிந்து விட்டது - ஆ.ராசா

சாதியால், மதத்தால் பிரிவினை ஏற்படுத்தி, அதில் ரத்த ஆறு ஓட வைத்து மோடி பிரதமராக நீடிக்க நினைக்கிறார் . இந்த கோணல் புத்தியால் பத்தாண்டு காலம் நாட்டை சீரழித்து விட்டார் என ஆ.ராசா பேசினார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள சேலாஸ், மஞ்சூர், எடக்காடு, இத்தலார் உள்பட பல்வேறு பகுதிகளில் நீலகிரி நாடாளுமன்ற தனி தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசா எம்.பி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வந்தது. ஆனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மகளிருக்கு இந்த திட்டத்தை பயன்படுத்த முடியாமல் இருந்த நிலையில் அது தொடர்பாக உடனடியாக முதலமைச்சரிடம் தொடர்பு கொண்டு நீலகிரி மாவட்டத்தின் அனைத்து கிராமங்களுக்கும் மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம் செயல்படுத்தப்பட்டது.

அமலாக்கத்துறை, வருமானவரித்துறை உள்ளிட்டவற்றை ஏவி விடும் மோடி மற்றும் அமித்ஷா போன்றோருக்கு சிம்ம சொப்பனமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார். நான் 8 தேர்தல்களை சந்தித்துள்ளேன். ஆனால் இந்தமுறை வித்தியாசமாகவும், பதட்டமானதாகவும் தேர்தல் உள்ளது. இந்த தேர்தலில் செய்ய வேண்டிய கடமையை செய்யாவிட்டால் இந்த தேசம் இனிமேல் இருக்காது என்ற அச்சத்தின் விளிம்பில் இந்த தேர்தல் நடக்கிறது. இந்த அச்சத்தை கண்டறிந்து, இந்தியா இருக்க வேண்டும் என்றால், மோடி வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறியவர், முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற போது ஒரு பக்கம் கொரோனா பாதிப்பு, மற்றொருபுறம் ரூ.5 லட்சம் கோடி கடன் இருந்தது. வெள்ள பாதிப்பும் ஏற்பட்டது.

இந்த 3 பிரச்னைகளையும் ஒரே வருடத்தில் சமாளித்து, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். நீலகிரியில் கோவில், மசூதி, தேவாலயம் என 3 உள்ளது. ஆனால் நம்மிடம் சண்டை கிடையாது. இந்துக்கள் வீட்டில் செய்யப்படும் தீபாவளி பலகாரம் முஸ்லிம் வீட்டுக்கு செல்கிறது. இஸ்லாமியர் வீட்டில் செய்யப்படும் பிரியாணி இந்துக்கள் வீட்டுக்கு வருகிறது. கிறிஸ்தவ சமுதாயத்தினரின் கேக் அனைத்து சமுதாயத்தினர் வீடுகளுக்கும் செல்கிறது. அல்லா, இயேசு, பெருமாள், சிவன் என்று யாரை வேண்டுமானாலும் கும்பிடலாம். நாம் மொழியால் தமிழர்கள், நாடால் இந்தியர்கள் என்ற உணர்வை இங்கு பெற்றுள்ளோம்.

இது மோடிக்கு பிடிக்காது. மதத்தால், சாதியால் பிரிவினை ஏற்படுத்தி, அதில் ரத்த ஆறு ஓட வைத்து பிரதமராக நீடிக்க மோடி நினைக்கிறார். இந்த கோணல் புத்தியால் பத்தாண்டு காலம் நாட்டை சீரழித்து விட்டார். கடந்த சில நாட்களாக தமிழகத்திற்கு அதிக முறை வந்த மோடி, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது ஏன் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட செயலாளர் முபாரக், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உள்பட பலர் இருந்தனர்.

Tags

Next Story