பிரதமர் மோடி வருகை : புதிய ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் பரிசோதனை
பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாளை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' நடைபயணம் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார். தொடர்ந்து மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அன்று இரவு மதுரையில் ஓய்வெடுக்கிறார். மறுநாள் காலையில் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வருகிறார்.
தூத்துக்குடி வ.உ.சி துறைமுக வளாகத்தில் துறைமுக பள்ளி விளையாட்டு மைதானம் அருகே உள்ள இடத்தில் காலை 11 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் பங்கேற்று குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டுதல், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வெளித்துறைமுக அடிக்கல் நாட்டுதல், 5 எம்.எல்.டி கடல் நீர் குடிநீராக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசுகிறார். இதனை முன்னட்டு தூத்துக்குடி துறைமுக பள்ளிக்கூடம் அருகே ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதனை தொடர்ந்து இந்த ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் கடற்படை ஹெலிகாப்டரை நேற்று தரையிறக்கி பரிசோதனை செய்தனர். நேற்று மதியம்1 மணி அளவில் வந்த ஹெலிகாப்டர் புதிதாக அமைக்கப்பட்ட இறங்குதளத்தில் வந்து இறங்கி நின்றது. சிறிது நேரத்துக்கு பிறகு மீண்டும் புறப்பட்டு சென்றது. தொடர்ந்து பிரதமர் பங்கேற்கும் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.