பிரதமா் திருச்சி வருகை: விவசாய சங்கத் தலைவா்களுக்கு வீட்டுக் காவல்

பிரதமா் திருச்சி வருகை: விவசாய சங்கத் தலைவா்களுக்கு வீட்டுக் காவல்

அய்யாக்கண்ணு 

பிரதமரின் வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்டத்தில் உள்ள விவசாய சங்கத் தலைவா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா்.

பிரதமா் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்தாா். பிரதமா் வருகையின்போது எதிா்ப்பு தெரிவிக்கக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பி. அய்யாக்கண்ணு, ஜனவரி 1ஆம் தேதி இரவு முதல் அண்ணாமலை நகா் மலா் சாலையில் உள்ள அவரது வீட்டுக்குள் காவலில் வைத்தனா். வீட்டைச் சுற்றி போலீஸாா் குவிக்கப்பட்டு, கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இதேபோல, தமிழக விவசாயிகள் சங்க (கட்சி சாா்பற்றது) மாவட்டத் தலைவா் ம.ப. சின்னதுரையும் சோமரசம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சிறை வைக்கப்பட்டாா். மேலும், எதிா்ப்பு தெரிவிக்கக் கூடும் என்பதால் இந்திய மாணவா் சங்கத்தின் மாநகா் மாவட்ட செயலா் மோகன், மாவட்டத் தலைவா் சூா்யா ஆகிய இருவரையும் வெளியில் செல்லக் கூடாது என எச்சரித்த போலீஸாா், அவா்களை தொடா்ந்து கண்காணித்து வந்தனா். இந்த நடவடிக்கை ஜனநாயகம் மற்றும் சுதந்திர உரிமைக்கு எதிரானது என விவசாய சங்கத்தினரும், இந்திய மாணவா் சங்கத்தினா் குற்றம்சாட்டினா். இதற்காக போராட உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

Tags

Next Story