பாமக வேட்பாளர் பாலு தேர்தல் அறிக்கை வெளியிட்டார்
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் கே.பாலு தனது தேர்தல் அறிக்கையை ராணிப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில்,கடந்த சில நாட்களாக அரக்கோணம் தொகுதியின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளை சிறப்பு குழு வாயிலாக கேட்டறிந்து, அதனை அடிப்படையாகக் கொண்டு 17 பக்கங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ராணிப்பேட்டை சிப்காட்டில் கடந்த 28 ஆண்டுகளாக, சுற்றுச்சூழலுக்கு சவாலாக உள்ள குரோமிய கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதன்மூலம் இந்தியாவின் தலைசிறந்த மாசற்ற சுற்றுச்சூழல் தொகுதியாக அரக்கோணம் தொகுதி மாற்றப்படும், மத்திய அரசு சார்பில் 5 மிகப்பெரிய தொழிற்சாலைகள் அமைத்து ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கைத்தறி ஜவுளி பூங்காக்கள், கேந்திர வித்யாலயா பள்ளிகள், மாம்பழ வேளாண் பண்ணைகள் அமைக்கப்படும்.
சிப்காட்டில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீண்டும் திறந்து அதிகப்படியான வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளுடன், நான் வெற்றி பெற்றால் மேற்கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன் என கூறினார்.