மருத்துவ மாணவி தற்கொலை - அழிக்கப்பட்ட கணிணி ஆவணங்களை மீட்க நடவடிக்கை

மருத்துவ மாணவி தற்கொலை -  அழிக்கப்பட்ட  கணிணி ஆவணங்களை மீட்க நடவடிக்கை

சுகிர்தா

குமரி மாவட்டத்தில் மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில் மருத்துவ பேராசிரியரின் லேப்டாப்பில் அழிக்கப்பட்ட ஆவணங்களை மீட்கும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

குமரி மாவட்டத்தில்உள்ள ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் தூத்துக்குடியை சேர்ந்த சுகிர்தா (வயது 27) என்ற மாணவி தங்கி படித்து வந்தார். இவர் கடந்த 6-ந் தேதி கல்லூரி விடுதி அறையில் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தில் கல்லூரி பேராசிரியர் பரமசிவம் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், சீனியர் மாணவர் ஹரீஷ், மாணவி ப்ரீத்தி ஆகியோர் மனதளவில் தொந்தரவு கொடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டியதாக 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி பேராசிரியர் பரமசிவத்தை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சிறையில் இருக்கும் பேராசிரியர் பரமசிவம் மற்றும் முன்ஜாமீன் பெற்றுள்ள ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டனர். இதற்காக பேராசிரியர் பரமசிவத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த கோர்ட்டு, பரமசிவத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டது. தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார், பேராசிரியர் பரமசிவத்தை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது மாணவி சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தை காண்பித்து விசாரித்தனர். ஆனால் பேராசிரியர் பரமசிவம், தனக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று கூறியதாக தெரிகிறது. விசாரணை முடிந்து நேற்று முன்தினம் மாலையில் அவரை நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே பேராசிரியரின் மடிக்கணினி, செல்போன், ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதில் பல்வேறு ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவற்றை ரெக்கவரி டேட்டா மென்பொருள் என்ற நவீன மென்பொருள் மூலம் மீட்டு கொண்டுவரும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையே பயிற்சி மருத்துவ மாணவர்கள் ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக விசாரணைக்கு ஆஜராகும்படி 2 பேருக்கும் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story