காலியான அமைச்சர் பதவி - பொன்முடி தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல்

காலியான அமைச்சர் பதவி - பொன்முடி தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல்

முன்னாள் அமைச்சர் பொன்முடி

பொன்முடிக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு.

சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்வானவர். இவர் கடந்த 2006-2011ம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடிக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதனால், பொன்முடி மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதன் மீதான மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டதால் பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்தார்.

அதை தொடர்ந்து, தனக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி தண்டனை பெற்றதால் அவரது எம்.எல்.ஏ. பதவி காலியானது. திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதால், இடைத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். சபாநாயகர் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடித அனுப்பி இடைத்தேர்தல் குறித்து அறிவிக்க வலியுறுத்த வேண்டும்.

ஆனால், பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தும் கடிதம் அனுப்ப சபாநாயகர் தாமதப்படுத்துவதாக அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த சூழலில் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக சட்டசபை செயலகத்தில் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விரைவில் திருக்கோவிலூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பட்ட வாய்ப்புள்ளது.

Tags

Next Story