திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்த பிரதமர்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடிடம் மற்றும் பல்வேறு திட்ட பணிகளை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.முன்னதாக திருச்சி சர்வதேச விமான நிலைய முனைய கட்டடத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். அவருக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித் சிந்தியா மேம்படுத்தப்பட்ட பணிகள் குறித்து விளக்கினார்.

ரூ. 1100 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்ட இந்த இரண்டு நிலை புதிய சர்வதேச முனையக் கட்டடம் ஆண்டுதோறும் 44 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளைக் கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகம் உள்ள நேரங்களில் சுமார் 3500 பயணிகளைக் கையாளும் திறனை இது கொண்டுள்ளது. புதிய முனையத்தில் பயணிகள் வசதிக்காக அதிநவீன வசதிகள் மற்றும் அம்சங்கள் உள்ளன.இந்த நிகழ்ச்சியின்போது பல ரயில்வே திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

சேலம் - மேக்னசைட் சந்திப்பு - ஓமலூர் - மேட்டூர் அணைப் பிரிவில், 41.4 கிலோ மீட்டரை இரட்டை ரயில்பாதைத் திட்டம். மதுரை - தூத்துக்குடி இடையே 160 கிலோ மீட்டர் துாரத்திற்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டம், திருச்சிராப்பள்ளி - மானாமதுரை - விருதுநகர் ரயில் பாதை மின்மயமாக்கல், விருதுநகர் - தென்காசி சந்திப்பு மின்மயமாக்கல், செங்கோட்டை - தென்காசி சந்திப்பு - திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில்பாதை மின்மயமாக்கல் ஆகிய மூன்று திட்டங்களும் இதில் அடங்கும். சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துத் திறனை மேம்படுத்தவும், தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த ரயில் திட்டங்கள் உதவும்.கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் (ஐ.ஜி.சி.ஏ.ஆர்) விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலையை (டி.எஃப்.ஆர்.பி) பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ரூ. 400 கோடி செலவில் உருவாக்கப்பட்ட டி.எஃப்.ஆர்.பி ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது உலகிலேயே ஒரே வகையான மற்றும் வேகமான உலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கார்பைடு மற்றும் ஆக்சைடு எரிபொருட்களை மறுசுழற்சி செய்யும் திறன் கொண்டது. இது முற்றிலும் இந்திய விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெரிய வணிக அளவிலான விரைவான அணு உலை எரிபொருள் மறுசுழற்சி ஆலைகளை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக இது அமையும்.

Tags

Next Story