பிரதமர் மோடி நாளை சேலம் வருகை

பிரதமர் மோடி நாளை சேலம் வருகை

பிரதமர் மோடி 

சேலத்தில் நாளை நடைபெறும் பா.ஜ.க தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பிரதமர் வருகையையொட்டி 2731 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம், நாமக்கல், கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரசார கூட்டம் சேலத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் நடக்கிறது. இதற்காக சேலம் அருகே கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பிரமாண்டமான மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

இதற்காக பிரதமர் மோடி நாளை காலை 11.40 மணிக்கு கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் மதியம் 12.50 மணிக்கு மேடை அமைக்கப்பட்டு உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டி மைதானத்துக்கு வருகிறார். அங்கு அவருக்கு சேலம், நாமக்கல், கரூர் மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பை ஏற்றுக்கொண்ட பிறகு பிரதமர் மோடி மதியம் 1 மணிக்கு தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு சென்று தனது பேச்சை தொடங்குகிறார்.

மதியம் 1.50 மணி வரை சிறப்புரையாற்றுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி சேலம் வருவதையொட்டி போலீஸ் டி.ஜி.பி., 4 டி.ஐ.ஜி.க்கள், 12 போலீஸ் சூப்பிரண்டுகள், 18 கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 32 துணை சூப்பிரண்டுகள், 60 இன்ஸ்பெக்டர்கள், 208 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 2,399 போலீசார் என மொத்தம் 2 ஆயிரத்து 731 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பிரதமர் மோடி சேலம் வருவதையொட்டி பாதுகாப்பு கருதி இன்றும், நாளையும் 2 நாட்கள் மாவட்ட காவல் எல்லையில் டிரோன்கள் மற்றும் ஆள் இல்லாத விமானங்கள் பறக்க தடை விதித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் உத்தரவிட்டு உள்ளார்.

Tags

Next Story