பிரதமர் பங்கேற்ற ரோட் ஷோ - உற்சாக வரவேற்பு அளித்த பாஜகவினர்

பிரதமர் பங்கேற்ற ரோட் ஷோ - உற்சாக வரவேற்பு அளித்த பாஜகவினர்

பிரதமர் மோடியின் ரோடு ஷோ

கோவையில் நடந்த வாகன அணிவகுப்பு பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் திரண்டிருந்த பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்

கோவை:கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.அப்போது பாஜகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.பின்னர் விமான நிலையத்தில் இருந்து காரில் சாலை மர்க்கமாக பிரதமர் மோடி சாய்பாபா காலனி பகுதிக்கு சென்றார்.சாய்பாபா காலனி பகுதியில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ எனப்படும் வாகன அணிவகுப்பு பேரணி துவங்கியது

.சாய்பாபா காலனி பகுதியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை 2.5 கி.மீ. தூரத்திற்கு நடந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். சாலையின் இரு புறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு கட்சிக்கொடிகள் நடப்பட்டு இருந்தது.அப்போது திறந்த வாகனத்தில் வந்த பிரதமர் மோடி பொதுமக்களை சந்தித்தார்.அப்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் அவரது வாகனத்தில் உடன் இருந்தனர். வழிநெடுக இருபுறமும் திரண்டிருந்த பாஜகவினர் கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.

அப்போது திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து பிரதமர் மோடி கையசைத்தும்,வணக்கம் வைத்தும் உற்சாகப்படுத்தினார்.வழிநெடுக திரண்டிருந்த மக்களில் பலர் மோடியை வரவேற்கும் வகையில் பதாகைகளையும் அவரது உருவப்படங்களையும் ஏந்தியபடி வரவேற்பு அளித்தனர்.மேலும் மேளதாளங்கள் முழங்க நடனமாடி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் பழங்குடியின மக்கள் நடனம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.ஆர்.எஸ்.புரம் பகுதியில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி நிறைவடைந்தது.அங்கு கடந்த 1998ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Tags

Next Story