சென்னையில் அதி கனமழைக்கான வாய்ப்பு குறைவு, மிதமான மழையே பெய்யும்: பிரதீப் ஜான்
pradeep john
சென்னையில் அதி கனமழைக்கான வாய்ப்பு குறைவு என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று பிற்பகலில் தொடங்கியது. ஆரம்பமே அதிரடியாக வட தமிழக மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று இரவு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. நாளை காலை சென்னையில் கரையை கடக்கும் என்றும், சென்னைக்கு தென்கிழக்கே 440 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்திருந்தது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிக்கு இன்றும் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. முன்னதாக கடந்த 2 நாட்களில் இந்த நான்கு மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்தது. சில இடங்களில் 30செ.மீ மழைகூட பதிவாகியிருந்தது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது சென்னைக்கு அதி கனமழைக்கான வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தெற்கு ஆந்திரா நோக்கி கரையைக் கடப்பதால் சென்னையில் அதி கனமழைக்கான வாய்ப்பு குறைவு என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். சென்னையில் மிதமான மழையே பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 20செ.மீ மேல் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.