துப்பாக்கி சூடு சம்பவ போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வா ? - சீமான்
சீமான்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமான போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு அளித்ததற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நடைபெற்ற தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் மண்ணின் மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தால் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளுள் ஒருவரான சைலேஷ்குமார் யாதவுக்கு பதவி உயர்வு வழங்கியிருக்கும் தி.மு.க. அரசின் செயல்பாடு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
அப்பாவி மக்களைக் கொன்று குவித்த குற்றவாளிகளைக் கூண்டிலேற்றி, அவர்களுக்கு தண்டனையைப் பெற்றுத்தருவோம் என வாக்குறுதியளித்து ஆட்சியதிகாரத்துக்கு வந்துவிட்டு, இன்றைக்கு அவர்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. அ.தி.மு.க.வுடன் நாளும் வார்த்தைப்போர் செய்து, லாவணிச்சண்டை போடும் தி.மு.க, அ.தி.மு.க.வின் ஆட்சிக்காலத்தில் நடந்த பெருங்குற்றத்திற்கு நீதியைப் பெற்றுத்தர மறுப்பது வெட்கக்கேடு இல்லையா? தி.மு.க.வுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கூறுவோரைக்கூட வழக்குத்தொடுத்து கைது செய்து சிறைப்படுத்தும் தி.மு.க. அரசு, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய கொலையாளிகள் மீது வழக்கு தொடுக்க மறுத்து அவர்களைக் காப்பாற்றி வருவது ஏற்கவே முடியாதப் பேரவலமாகும்.
ஆகவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் மக்களை பச்சைப்படுகொலை செய்திட்ட காவல்துறையினர் மீதும், ஏவிவிட்ட அதிகார வர்க்கத்தினர் மீதும் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி, சட்ட நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மாறாக மக்களைப் படுகொலை செய்தவர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற துணைபோனால் தூத்துக்குடி துப்பாக்கி சூடு எனும் அரசப்பயங்கரவாத நடவடிக்கையில், அ.தி.மு.க.வோடு சேர்த்து தி.மு.க.வும் வரலாற்றுப்பழியை சுமக்க நேரிடுமென எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.