துபாய் வளைகுடா தமிழ்ச் சங்கத்தில் கவிஞர் ஹைருன்னிஷா எழுதிய கவிதை நூல் வெளியீடு

துபாய் வளைகுடா தமிழ்ச் சங்கத்தில் கவிஞர் ஹைருன்னிஷா எழுதிய கவிதை நூல் வெளியீடு

கவிதை நூல் வெளியீடு 

துபாய் வளைகுடா தமிழ்ச் சங்கத்தில் இணைய வழியாக இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கவிஞர் ஹைருன்னிஷா எழுதிய நடந்து சென்ற மின்னல்' கவிதை நூல் வெளியீட்டு விழா 14 ஜூலை 2024 ஞாயிறன்று நடந்தது.

தொடக்கமாக திண்டுக்கல் ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதினார். கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் கவிதைகளின் இயல்புகள், முக்கியத்துவம் குறித்து விவரித்தார். மேலும் கவிஞர் ஹைருன்னிஷாவின் கவித்திறனை பாராட்டினார். அவருக்கு தான் எழுதிய ‘திப்பு சுல்தான் காவியம்’ என்ற நூலை அன்பளிப்பாக வழங்கினார்.

வளைகுடா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் கவிஞர் ஹைருன்னிஷா எழுதிய நடந்து சென்ற மின்னல்' கவிதை நூல் துபாய் முஹம்மத் பின் ராஷித் நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த நூல் வாசகர்கள் படிக்க கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றார்.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஓய்வு பெற்ற துணை முதல்வர் மற்றும் தமிழ்த் துறைத் தலைவர் கம்பம் பீ.மு. மன்சூர் நூலை இணையவழியாக வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

கவிஞர் மிகவும் பாரம்பரியமான இஸ்லாமிய பகுதியில் இருந்து தனது திறமைகளை வெளியுலகுக்கு கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது. கவிஞர் மேலும் பல நூல்களை இலக்கிய உலகுக்கு படைக்க வேண்டும் என்றார். அவரது இலக்கிய திறமையை பாராட்டி ‘கிராண்ட் யுனிவர்ஸ் வெல்ட் ரெக்கார்ட்’ அமைப்பு வழங்கிய பாராட்டு சான்றிதழையும் வழங்கி கௌரவித்தார்.

நாகம்பட்டி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் பவானி, திருநெல்வேலி வழக்கறிஞர் தேவிபிரியா, சமூக ஆர்வலர் ரமாமலர், முதுவை எழுத்தாளர் சம்சுல் ஹுதா, கவிஞர் நூர் ஃபாத்திமா, ஏர்வாடி செய்யது ருக்னுதீன் இப்ராஹிம், சிங்கப்பூர் இஸ்மாயில், ஷார்ஜா லதா ராமகிருஷ்ணன், நல்லாசிரியர் புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

நூலாசிரியர் கவிஞர் ஹைருன்னிஷா ஏற்புரை நிகழ்த்தினார். இணையவழியாக எனது நூலை வெளியிட்ட துபாய் வளைகுடா தமிழ்ச் சங்கத்துக்கும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கிய தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி தனக்கு மன நிறைவு அளித்தது. எனது எழுத்துப்பணிக்கு தொடர்ந்து உற்சாகம் அளிக்கும் வகையில் இது அமைந்திருந்தது என்றார்.

Tags

Next Story