நீலகிரியில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக க்யூ.ஆர் கோடு அறிமுகம்!

நீலகிரியில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக க்யூ.ஆர் கோடு அறிமுகம்!

 க்யூ.ஆர் கோடு அறிமுகம்

நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளுக்கு வழிக்காட்டுவதற்காக க்யூ.ஆர்., கோடு திட்ட வரைபடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்திரவடிவேல் ஊட்டியில் அறிமுகப்படுத்தினார்.

நீலகிரி மாவட்டத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த வாகனங்கள் நகருக்குள் வரும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ஒரு வழிப்பாதை, உள்பட பல்வேறு மாற்று ஏற்பாடுகளை போலீஸார் செய்துள்ளனர். இந்தநிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட சாலையில் இருந்து அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்பட பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு செல்வதற்காக, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக க்யூ.ஆர்., கோடுடன் கூடிய வழிகாட்டி வரைபடம் வழங்கும் திட்டத்தை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தொடங்கி வைத்தார்.

அப்போது சுற்றுலா பயணிகளுக்கு இந்த திட்டம் குறித்து விரிவாக விளக்கினார். இதன் மூலம் சுற்றுலா பயணிகள் வரைபடத்தில் உள்ள க்யூ.,ஆர்., கோடை ஸ்கேன் செய்து தாங்கள் விரும்பும் இடங்களுக்கு செல்லலாம். ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் இதுபோல் வரைபடம் வழங்கப்பட்டு வந்தாலும், இந்த ஆண்டு கூடுதலாக க்யூ.ஆர்., கோடு ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது சிறப்பம்சமாகும்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் நிருபர்களிடம் கூறியதாவது:- நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளுகள் லவ்டேல் பகுதியில் இருந்து படகு இல்லம், ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையில் 3 வரைபடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. முப்பதாயிரம் வரைபடங்கள் அச்சிடப்பட்டுள்ளது. மலர் கண்காட்சிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இவை விநியோகிக்கப்படும். கோடை சீஸனை முன்னிட்டு ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்களுக்காக கோவை சரக டி.ஐ.ஜி., உத்தரவின் பேரில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து போலீஸார் வந்துள்ளனர்.

இதேபோல் தமிழ்நாடு சிறப்பு போலீஸார் மற்றும் நீலகிரி போலீஸார் என மொத்தம் 600 பேர் பணியில் ஈடுபடுகின்றனர். தேவைப்பட்டால் கூடுதல் போலீஸார் பணியமர்த்தப்படுவார்கள். ஊட்டி நகர் மற்றும் சோதனை சாவடிகளில் சுமார் 1300 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக சிறப்பு கிரைம் போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் முக்கிய சுற்றுலா தளங்கள் அருகில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் படகு இல்லத்திலும் காவல் உதவி மையம் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story