ராமநாதபுரம் : கனமழையால் 3000 ஏக்கர் பயிர்கள் சேதம்

ராமநாதபுரம் :  கனமழையால் 3000 ஏக்கர் பயிர்கள் சேதம்

விளை நிலங்களுக்குள் புகுந்த வெள்ளம் 

ராமநாதபுரம் கமுதி அடுத்த பெருநாழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 3 ஆயிரம் ஏக்கர் அளவில் பயிரிடப்பட்ட பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கி சேதம், உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பெருநாழி, பொந்தம்புளி, வாழவந்தாள்புரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் மானாவாரி பயிராக நெல்,கம்பு, சோளம், மிளகாய், வெங்காயம், சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்கள் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்துள்ளது. தற்போது கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் சுற்றியுள்ள கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்து, சுமார் 3000 ஏக்கருக்கு மேலான பயிர்களை முழுவதுமாக மூழ்கடித்துள்ளது.

ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை செலவு செய்து பயிரிட்டுள்ள பயிர்கள் அனைத்தும் முழுவதும் வெள்ள நீரில் மூழ்கியதால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் வெள்ளநீர் புகுந்து மூன்று நாட்கள் ஆகியும் இதுவரை எந்த அதிகாரிகளும் இப்பகுதியை பார்வையிட்டு விவசாயிகளின் கோரிக்கையை கேட்டறியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர். எனவே தமிழகஅரசும், மாவட்ட நிர்வாகமும் இப்பகுதி மக்களின் நிலையை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story