நேருக்கு நேர் விவாதிக்கத் தயார்: ஜெகத்ரட்சகனைச் சாடும் பாமக பாலு
வேட்பாளர்கள்
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் நடைபெற்ற பாமக வேட்பாளர் பாலு அறிமுக கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய பா.ம.க வேட்பாளர் பாலு, ‘‘தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகன் அவரின் கட்சித் தலைவரிடம், என்னத் தெரியுமா பேசியிருக்கிறார்?.
‘வேண்டாம், வேண்டாம்... எனக்கு அரக்கோணம் வேண்டாம். நான் ஒருமுறைக்கூட அரக்கோணம் மக்களைப் பார்த்ததில்லை. எந்தவித தொடர்பும் அந்த தொகுதிக்கும், எனக்கும் கிடையாது. எந்த முகத்தோடு மீண்டும் அந்த ஊருக்குப் போய் ஓட்டு கேட்பேன். ஆயிரம் கோடி தருகிறேன். எனக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுத்துவிடுங்கள்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால், ‘நீங்கள்தான் போக வேண்டும். ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவழிக்கிற ஒரே ஆள் நீங்கள்தான்’ என்று சொல்லி,
மீண்டும் அரக்கோணத்துக்கே ஜெகத்ரட்சகனை அனுப்பி வைத்திருக்கிறது தி.மு.க தலைமை. ஜெகத்ரட்சகன் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் எத்தனை கேள்விகளை எழுப்பினார்?. கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றினார்?.
பத்திரிகையாளர்கள் முன்பு நேருக்குநேர் விவாதம் நடத்த தயாராக இருக்கிறேன். ஜெகத்ரட்சகன் தயாராக இருக்கிறாரா?. அவருடைய சௌகரியமான தேதியில் நேரம் ஒதுக்கட்டும். அப்படி கொடுத்தால், என்னுடைய விவாதத்தை நடத்துகிறேன். மக்கள் மன்றத்தில் விடுவோம். அவர்கள் அளிக்கும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன்'என்றார்.