மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காக நீர் திறப்பு
மேட்டூர் அணை
சேலம் மாவட்டம்,மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 15 -வரை 137 நாட்களுக்கு 9.60 டி.எம்.சி, தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கர், நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கர் என மொத்தம் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
மேலும் மூன்று மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி அடையும். இந்நிலையில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இல்லாதது மற்றும் கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காது உள்ளிட்ட காரணங்களால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்ததால் நடப்பு ஆண்டில் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாமல் போனது.
இதனால் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் கரையோர பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவியது. இந்நிலையில் கால்வாய் கரையோர மக்களின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாயில் வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் நேற்று மாலை திறக்கப்பட்டது. நேற்று முதல் 15 நாட்களுக்கு தண்ணீர் வெளியேற்றப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.