திருவெற்றியூர் பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் - அமைச்சர், எம்.பி வழங்கினா்
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய பின்னர், கடந்த நான்கு நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக, தொடர்ந்து பெய்துவந்த வரலாறு காணாத மழையால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இந்த புயல் மழையின் தாக்கம் மிக அதிகமாக ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னலில் இருக்கும் மக்களுடன் நமது அரசு என்றும் துணை நிற்கும். கட்சி வேறுபாடுகளைக் கடந்து, மக்கள் சக்தியின் துணை கொண்டு இயற்கைப் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களைவோம். இயற்கையின் கோரத் தாண்டவத்தை மனிதத்தின் துணைகொண்டு வெல்வோம். அரசோடு கரம் கோத்து சகமனிதரின் துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள கரம்கூப்பி அழைக்கிறேன்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சா்கள் தலைமையில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினா்கள் சென்று நிவாரண பொருட்கள் வழங்கி பாதுகாக்க வேண்டும் என அறிவித்துள்ளார். அதன்படி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை திருவெற்றியூர் பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பணியில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தலைமையில் நிவாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிவாரணப்பணியில் நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் மற்றும் கழக நிர்வாகிகளுடன் திருவெற்றியூர் பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.