நிவாரண பணிகள்: கனிமொழி எம்பி தலைமையில் ஆய்வுக் கூட்டம்

நிவாரண பணிகள்: கனிமொழி எம்பி தலைமையில் ஆய்வுக் கூட்டம்

ஆய்வு கூட்டம் 

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் குறித்து கனிமொழி எம்பி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மற்றும் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் வெள்ள பாதிப்புகள் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டு உள்ளது. மொத்தம் 7 ஆயிரத்து 762 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. இதற்கு நிவாரணத் தொகையாக ரூ.3 கோடியே 82 லட்சத்து 77 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. 1 லட்சத்து 53 ஆயிரத்து 132 எக்டேர் வேளாண் பயிர்களும், 32 ஆயிரத்து 592 எக்டேர் தோட்டக்கலை பயிர்களும் சேதம் அடைந்து உள்ளன. 688 ஏக்கர் நிலத்தில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மண் படிந்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுவணிகர்களுக்கு கடன் வழங்க கூட்டுறவு வங்கிகள் மூலம் மனுக்கள் பெறப்படுகின்றன. மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்து 282 உற்பத்தி நிறுவனங்களும், 30 ஆயிரத்து 297 சேவை நிறுவனங்களும், 2 ஆயிரத்து 583 வியாபாரம் சார்ந்த நிறுவனங்களும் உதயம் பதிவு சான்றிதழ் பெற்று உள்ளன. 1 லட்சத்து 17 ஆயிரத்து 471 கால்நடைகள் இறந்து உள்ளன. மழையால் உயிரிழந்த 44 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. இதே போன்று தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பகைள் அகற்றப்பட்டன.

மாநகராட்சி பகுதியில் 4 ஆயிரத்து 127 டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளன. கிராமங்களில் சேதம் அடைந்த 37 ஆயிரத்து 490 தெருவிளக்குகளில் 33 ஆயிரத்து 205 விளக்குகள் சரி செய்யப்பட்டு உள்ளன. சேதம் அடைந்த 85 குளங்களில் 82 குளங்களும், 80 கால்வாய்களில் 65 கால்வாய்களும், ஆற்றங்கரையில் ஏற்பட்ட 2 உடைப்புகளும் சரி செய்யப்பட்டு உள்ளன. சாலைகளில் ஏற்பட்ட உடைப்புகளும் சரிசெய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.

முன்னதாக மாவட்ட தொழில் மையம் சார்பில் நீட்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் 32 பயனாளிகளுக்கு ரூ.21,32,591 மானியத்துடன் ரூ.72,84,261 மதிப்பிலான கடனுதவிகளையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் சமுதாய திறன் பள்ளி தொடக்க நிதி மற்றும் இணை மானிய நிதியாக 10 ஊராட்சிகளுக்கு ரூ.27,07,759-க்கான காசோலைகளையும் கனிமொழி எம்.பி. வழங்கினார். கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்), எம்.சி.சண்முகையா (ஓட்டப்பிடாரம்), ஜி.வி.மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ் குமார், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story