வெப்பநிலையை கட்டுப்படுத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி - மெய்யநாதன்

வெப்பநிலையை கட்டுப்படுத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி - மெய்யநாதன்
சிவ.வீ.மெய்யநாதன் 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட, சுற்றுச்சூழல் அணி சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா, கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் திருமலைச்சாமி தலைமை வகித்தார். திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் சுப்பையா ராஜா வரவேற்றார். பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் முன்னிலை வகித்தார்.

கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு சிறப்புரையாற்றிய, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியதாவது, "ஒரு காலத்தில் கல்வி வாய்ப்பு, மிட்டா மிராசுகளுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும் மட்டுமே கிடைத்த நிலையில், கர்மவீரர் காமராஜர் வந்த பிறகு தொடக்க கல்வியை அனைவருக்கும் வழங்கினார். அதன்பிறகு பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் தந்தை பெரியார் வழியில் உயர் கல்வியை அனைவருக்கும் கொண்டு சென்றனர்.

இன்றைக்கு அவர்களது வழியில் தலைவர் தளபதி ஸ்டாலின் ஆட்சியில் வேளாண்மை, மருத்துவம், பொறியியல் என அனைத்து உயிர்கல்வியும் ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காகவே, "நான் முதல்வன்" திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. படித்த மாணவர்களுக்காக வேலைவாய்ப்பு பயிற்சி அளித்து அனைவருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் இரண்டே இரண்டு பல்கலைக்கழகங்கள் இருந்த நிலையில், இன்றைக்கு 22 பல்கலைக்கழகங்கள் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது.

20 கலை அறிவியல் கல்லூரி இருந்த மாநிலத்தில் இன்றைக்கு 163 அரசு கலை அறிவியல் கல்லூரி இயங்கிக் கொண்டிருக்கிறது. மாணவிகள் தடையின்றி கல்வி பயில வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாதமும் ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இன்றைக்கு தளபதியின் ஆட்சியில் தமிழகம் உயர்கல்வியின் பொற்காலமாக திகழ்கிறது. மருத்துவத்திற்கு மட்டும் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு இருந்த சமயத்தில், வேளாண், பொறியியல், சட்டக்கல்லூரி என அனைத்திலும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சட்ட முன்வடிவை தானே முன்மொழிந்து, சட்டமாக கொண்டு வந்தார்.

இந்த 1800 ஆண்டுகளில், 1.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதை 2030-ம் ஆண்டுக்குள் 1.5 டிகிரி செல்சியஸ் ஆக கட்டுப்படுத்த வேண்டும் என காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசின் குழு அறிவித்துள்ளது. அவ்வாறு நாம் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் பயன்பாட்டை, மின்சார பயன்பாட்டை குறைக்க வேண்டும். எனவே, இதனை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக நாம் மாற்ற வேண்டும். அதனை நிறைவேற்ற வேண்டிய நடவடிக்கையை, நமது தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார். இதற்காக பசுமை தமிழகம் என்ற திட்டத்தை உருவாக்கி, இந்த மூன்று ஆண்டு காலத்தில் ஆண்டுக்கு 10 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இதற்காக தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். கடந்தாண்டு மற்றும் 3 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இன்றைக்கு தமிழகத்தில் எந்த பகுதிக்கு சென்றாலும் பசுமையாக காட்சி தருகிறது. நாம் நீர்நிலைகளையும் தூய்மையாக பராமரிக்க வேண்டும்" என்றார்.

நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் பிரிவு மாநில துணைச் செயலாளர் கார்த்திகேயன் வேலுச்சாமி, மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன், வை.ரவிச்சந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் சக்ரவர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கழனிவாசல் ராதாகிருஷ்ணன், திமுகவின் பல்வேறு பிரிவு நிர்வாகிகள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிறைவாக பேராசியர் ராணி நன்றி கூறினார்.

Tags

Next Story