ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தற்கொலை
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தற்கொலை
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்து பெரிய கெங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (48). ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரேமலதா. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். மகள் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஜெயக்குமார் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். அதைத்தொடர்ந்து வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கணவன் மீது மனைவி பிரேமலதா வேலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதற்காக நேற்று முன்தினம் விசாரணைக்கு சென்ற ஜெயக்குமார் மாலையில் வீட்டுக்கு வந்தார். பின்னர் தனது மகனிடம் நிலத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
வெகு நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. நேற்று காலையில் மனைவி பிரேமலதா மற்றும் குழந்தைகள் நிலத்திற்கு சென்று பார்த்த போது வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். அருகில் விஷ பாட்டில் கிடந்தது. இதைப்பார்த்த மனைவி மற்றும் குழந்தைகள் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மனைவி பிரேமலதா அணைக்கட்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.