ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம்! பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா?
ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் இம்மாதம் 31-ம் தேதி நிறைவடைகிறது. மாநில ஆளுநராக நியமிக்கப்படுபவர்கள் 5 ஆண்டு காலம் அப்பதவியில் இருக்கலாம். அதன்பின்னர், புதியவர் ஒருவர் நியமிக்கப்படும் வரை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் அல்லது மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் மீண்டும் கவர்னராக அவரே நியமிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் கடந்த 15-ம் தேதி ஐந்து நாள் பயணமாகத் தலைநகர் டெல்லிக்குச் சென்றிருக்கிறார். 16-ம் தேதி பிரதமர் மோடியைச் சந்தித்தார் ரவி.அடுத்ததாக ஜூலை 17-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார். தொடர்ச்சியாக தர்மேந்திர பிரதான், கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பல்வேறு துறை அமைச்சர்களையும் சந்தித்துப் பேசினார்.
எனவே, அவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானின் பதவிக்காலமும் விரைவில் விரைவில் முடிவடைகிறது. ஏற்கனவே, ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், காலியாக உள்ள தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் ஆகிய பதவிகளையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.
இவற்றை கருத்தில் கொண்டு, தமிழகம், கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்கலாமா? என்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.