அமைச்சரின் உதவியாளருக்கு சாலை ஒப்பந்தம் - நீதிமன்றம் உத்தரவு
உயா்நீதிமன்ற மதுரைக் கிளை
சிவகங்கை மாவட்டத்தைச் சோந்த கந்தசாமி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டத்தில் சாலைகளைப் பலப்படுத்துதல், சீரமைக்கும் திட்டத்தில் கீழையூா்-தாயமங்கலம், சாலைக்கிராமம்- சருகுணி சாலையை மேம்படுத்தும் பணிக்காக ரூ. ஒரு கோடியே 75 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி (டெண்டா்) அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இந்தப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிக்கு விண்ணப்பிப்பவா்கள் சொந்தமாக இயந்திரம் வைத்திருப்பதற்கான ஆவணங்கள், தரக் கட்டுப்பாட்டு பொறியாளரிடம் பெறப்பட்ட சான்றுகள் ஆகியவற்றை இணைத்து கடந்த பிப். 26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
இதனடிப்படையில், நான் இந்தப் பணிகளுக்கான ஒப்பந்தம் எடுப்பதற்காக உரிய ஆவணங்களைச் சமா்ப்பித்து இணையதளம் மூலம் விண்ணப்பித்தேன். ஆனால், எனது விண்ணப்பத்தை காரணமின்றி அரசு அதிகாரிகள் நிராகரித்தனா். அதேநேரம், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக கூட்டுறவு துறை அமைச்சா் பெரியகருப்பனின் உதவியாளா் இளங்கோவுக்கு, இந்தச் சாலை ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சாலைப் பணிகளை தனது உதவியாளா் மூலம் அமைச்சா் பெரியகருப்பன் மேற்கொள்ள முயற்சிக்கிறாா். அரசியல் தலையீடு இருப்பதால், இந்த ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்து, புதிய ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை வெளிப்படைத் தன்மையுடன் நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தம் எடுத்துள்ள இளங்கோவன் சொந்தமாக இயந்திரங்கள் வைத்துள்ளாரா?. இந்த ஒப்பந்தத்துக்கான விண்ணப்பம், ஆவணங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்திருக்கிறாரா?. இந்த ஒப்பந்தம் தொடா்பான அனைத்து ஆவணங்களையும் அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு வருகிற வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரிக்கப்படும் என்றாா் நீதிபதி.